முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஆலோசனை கூட்டம்
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடத்துவது குறித்து பொதுமக்களுடன் ஆலோசனைக்கூட்டம் கோயில் செயல் அலுவலர் சுந்தரி முன்னிலையில் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் சித்திரைத்திருவிழா மே 6 ல் துவங்கி மே 10 ல் முடிகிறது. விழாவிற்கான கொடியேற்று விழா நாளை மறுநாள் (ஏப்ரல் 29) நடைபெறுகிறது. செவ்வாய் துவங்கி வெள்ளி வரை 4 நாட்களும் சக்கம்பட்டியின் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் உலா வந்து அருள்பாலிக்கும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக தீச்சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.விழா நாட்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்தும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும், பொங்கல் விழாவில் கோயிலில் பொங்கல் வைத்தல், தீச்சட்டி, பால்குடம் எடுத்தல், பூக்குழி இறங்குதல் மற்றும் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்களிடம் ஹிந்து அறநிலையத்துறை மூலம் வசூலிக்க வேண்டிய கட்டண விவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.