தேனி மருத்துவக்கல்லுாரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அவசியம்; பாதிக்கப்படுவோர் ஆலோசனை பெறக்கூட வழியில்லை
மாவட்டத்தில் பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனை, ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உட்பட 6 அரசு மருத்துவமனை உள்ளது. பிரசவம், விபத்து உள்ளிட்ட தீவிர சிகிச்சைக்கு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தேனி மருத்துவக்கல்லுாரிக்கு தேனி மாவட்டம் மற்றும் இன்றி அருகில் உள்ள கேரள மாநிலத்தில் இருந்தும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர். மக்களிடம் போதிய விழிப்புணர்வு இன்றி சிகரெட்,புகையிலை, பான்பராக் பயன்பாடு அதிகரித்து பலர் புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாவதும் அதிகரித்து வருகிறது. இச் சூழ்நிலையில் தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு இல்லை. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையை தவிர பிற மருத்துவமனைகளில் புற்றுநோய்க்கு ஆரம்ப கட்ட சிகிச்சை, ஆலோசனை வழங்க கூட வசதி இல்லை. புற்றுநோய் பாதித்து தேனி மருத்துவ கல்லுாரிக்கு வருபவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்கின்றனர். இதனால் புற்றுநோய் ஆரம்ப அறிகுறி உள்ளவர்களில் 60சதவீதம் பேர் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தொடர் சிகிச்சைக்கு மதுரை மருத்துவமனைக்கு செல்வதில்லை. வருவது வரட்டும் என்ற மனநிலையில் வீடு திரும்புகின்றனர். காலப்போக்கில் நோய்பாதிப்பு அதிகரித்து இறந்தும் விடுகின்றனர். சிலர் மட்டுமே பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்கின்றனர்.பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் வாய்புற்றுநோய், தொண்டை, நுரையீரல், மார்பக, குடல், கர்ப்பப்பை வாய், தைராய்டு, ஆண் உறுப்பு, பெண் உறுப்பு, மூளை புற்றுநோய் உட்பட பல்வேறு புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு தினமும் 7 முதல் 10 பேர் வரை வெளிநோயாளிகளும், இதில் 35 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். இங்கு நோயின் தன்மைக்கேற்ப மாத்திரை, மருந்து மற்றும் அறுவை சிகிச்சையில் குணப்படுத்துகின்றனர். மாவட்டத்தில் 8 மாதங்களில் 177 பேர் பல்வேறு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றனர். இதில் 70 பேர் இறந்துள்ளனர். தற்போது 107 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் கஞ்சா புகைப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுவர்கள் அதிகரித்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். எனவே, தேனி மருத்துவக்கல்லுாரியில் புற்றுநோய் சிகிச்சை பிரிவிற்கு உரிய சிறப்பு நிபுணர்கள், அதிநவீன சிகிச்சை கருவிகளுடன் வார்டு துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.-