என்.எச்., விரிவாக்க பணிகளுக்கு தடை தேவிகுளம் தாலுகாவில் ஜூலை 31ல் பந்த்
மூணாறு: நேரியமங்கலம், வாளரா இடையே ரோடு விரிவாக்க பணிக்கு ஏற்பட்ட தடையை கண்டித்து தேவிகுளம் தாலுகாவில் ஜூலை 31ல் ' பந்த்' நடக்கிறது. கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு, கொச்சி இடையே 126 கி.மீ., தூரம் ரூ.1250 கோடி செலவில் ரோடு அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த ரோட்டில் அடிமாலி அருகே வாளரா முதல் நேரியமங்கலம் வரை 14.5 கி.மீ., தூரம் ரோடு கடும் வனத்தின் வழியாக கடந்துசெல்கிறது. அப்பகுதியில் விதிமுறைகள் மீறி பணிகள் நடப்பதாக கூறி கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பணிகள் செய்ய தடை விதித்து நீதிமன்றம்உத்தரவிட்டது. அச்சம்பவத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்ளவும், போராட்டம் நடத்த வசதியாகவும் பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் உட்படுத்தி தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பு குழு எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. அக்குழு சார்பில் தேவிகுளம் தாலுகாவில் ஜூலை 31ல் ' பந்த்' நடத்த முடிவு செய்யப்பட்டது. அன்று ' பந்த்' துடன் ஆறாம் மைல் வனத்துறை அலுவலகம் முதல் நேரியமங்கலம் வனத்துறை அலுவலகம் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலம் நடத்தவும் முடிவு செய்துள்ளதாக பாதுகாப்பு குழு முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.