சபரிமலை வாகனங்களுக்கு இந்த ஆண்டு ஒரு வழிப்பாதை நடைமுறை ரத்து
கம்பம்: சபரிமலைக்கு செல்லும் வாகனங்களை கம்பமெட்டு ரோட்டில் திருப்பிவிடும் ஒரு வழிப் பாதை நடைமுறை இந்தாண்டு ரத்து செய்யப்படும் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசனில் 2 மாதங்களுக்கு தென் மாநிலங்கள் முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் சபரிமலைக்கு செல்வது வழக்கம். பக்தர்களின் வாகனங்கள் குமுளி மலைப்பாதை வழியாக சென்று வரும் போது வாகன நெரிசல் ஏற்படும். வாகன நெரிசலை தவிர்க்க சபரிமலை வாகனங்களை கம்பத்தில் இருந்து கம்பமெட்டு வழியாக திருப்பி அனுப்படும். கோயிலிலிருந்து வரும் வாகனங்கள் மட்டுமே குமுளி மலைப் பாதையில் வரும். கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை இருந்து வருகிறது. இந்தாண்டு கார்த்திகை முதல் தேதியிலிருந்தே வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒரு நாளைக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் வரை உள்ளது. இந்நிலையில் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்து வாகனங்கள் அதிகமாக வரத் துவங்கி உள்ளது. இரவில் குமுளி மலைப்பாதையில் கடும போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக ஏல விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக டிச. 15 முதல் 20ம் தேதிக்குள் ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்படும். ஆனால் இந்தாண்டு புத்தாண்டு பிறக்க உள்ளது. இன்னமும் ஒரு வழிப்பாதை அறிவிப்பு வெளியாகவில்லை. இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, ' சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆன்லைனில் புக் செய்து தான் தரிசனம் அனுமதிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 80 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கின்றனர். அங்கு கூட்ட பராமரிப்பு மேலாண்மை சரியாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்ட நெரிசல் இல்லாத நிலை உள்ளது. எனவே இந்தாண்டு ஒரு வழிப்பாதை அமல்படுத்த வாய்ப்பில்லை. தேவைப்பட்டால் தேனி, இடுக்கி கலெக்டர்கள் பேசி முடிவு செய்வார்கள் என்றார். எனவே கம்பமெட்டு ரோட்டில் சபரிமலை வாகனங்களை திருப்பி விடும் அறிவிப்பு இந்தாண்டு இருக்காது என்கின்றனர்.