ஆம்னி பஸ்சை அதிவேகமாக ஓட்டிய போதை டிரைவர்களை போலீசில் ஒப்படைத்த பயணிகள் பஸ் பறிமுதல்; ரூ.11 ஆயிரம் அபராதம்
தேனி:சென்னையில் இருந்து தேனி மாவட்டம், கம்பம் வந்த ஆம்னி பஸ் டிரைவர் மது குடித்து போதை அதிகரித்து அதிவேகமாக தாறுமாறாக பஸ்சை ஓட்டினார். பீதியடைந்த பயணிகள் தேனி போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர், மாற்று டிரைவரை ஒப்படைத்து புகார் அளித்தனர். போதை டிரைவருக்கு போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்தனர்.சென்னையில் இருந்து தேனி மாவட்டம், கம்பத்திற்கு ஸ்ரீகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனம் ஆம்னி பஸ் இயக்குகிறது. நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூரை சேர்ந்த வினோத் 45, டிரைவராக பஸ்சை ஓட்டி வந்தார். மாற்று டிரைவராக சிவா 32 இருந்தார். திண்டுக்கல் -குமுளி பைபாஸ் ரோடு வத்தலக்குண்டுக்கு 'அ பிரிவு' அருகே பஸ் அதிவேகமாக தாறுமாறாக செல்வதை அறிந்த பயணிகள் அச்சமடைந்து பஸ்சின் முன் பகுதிக்கு வந்து பார்த்தனர். அப்போது வினோத் போதை மயக்கத்தில் துாங்கிக் கொண்டிருந்தார். சிவா தாறுமாறாக பஸ்சை ஓட்டியுள்ளார். பஸ்சை நிறுத்த கூறி சிவாவிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். ஆனாலும் நிறுத்த வில்லை. பயணி ஒருவர் அலைபேசியில் அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் பஸ் அன்னஞ்சி விலக்கை கடந்து தேனி நோக்கி சென்றது. அல்லிநகரம் போலீசார் மைக் மூலம் தேனி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கூறினர். தேனி எஸ்.ஐ., முருகேசன் தலைமையிலான போலீசார் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கினர். டிரைவர்கள் வினோத், சிவா இருவரும் மதுபோதையில் இருந்ததை உறுதி செய்தனர். இதையடுத்து வினோத்திற்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து பஸ்சை ஸ்டேஷன் முன் நிறுத்தினர். தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் கூறுகையில், 'தேனி மாவட்டத்தில் 35 ஆம்னி பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்தும் ஆம்னி பஸ்கள் வந்து செல்கின்றன. போதையில் பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் குறித்து ஆய்வு செய்து அபராதம் விதிக்கிறோம். நேற்று போதையில் பஸ் ஓட்டி வந்த டிரைவர்கள் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். டிரைவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவர்,'என்றார்.