பயணிகள் நிழற்குடை திறப்பு விழா
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் மரிக்குண்டு ஊராட்சி எம்.சுப்புலாபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடந்தது.இக்கிராமத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். மக்கள் பயணிகள் நிழற்குடை வசதியின்றி பொது மக்கள் சிரமப்பட்டனர். பொது மக்களின் கோரிக்கையை ஏற்று ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை, அதனைச் சுற்றி பூங்காவும் அமைக்கப்பட்டது. புதிய நிழற்குடையை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் திறந்து வைத்தார். துணைத் தலைவர் வரதராஜன், பி.டி.ஓ., ஜெகதீச சந்திரபோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமத் தலைவர் வெங்கடராமானுஜம், வார்டு உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் வரவேற்றனர். ஒன்றிய கவுன்சிலர் பவானி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம் அ.தி.மு.க., மாவட்ட பிரதிநிதி கவிராஜன், எஸ்.ஐ.,(ஓய்வு) கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிராம கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.