தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் உலா வந்த காட்டு யானைகள் போட்டோ, வீடியோ எடுத்து ரசித்த பயணிகள்
கூடலுார்: தேக்கடி படகு நிறுத்தப்பகுதியில் காட்டு யானைகள் உலா வந்ததை வீடியோ, போட்டோ எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.கேரளாவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் தேக்கடியும் ஒன்று. அடர்ந்த வனப் பகுதிக்கு நடுவே தேங்கியிருக்கும் ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே கரையோரப் பகுதியில் உள்ள வனவிலங்குகளை கண்டு ரசிப்பதில் சுற்றுலா பயணிகளுக்கு ஆனந்தம். அந்த வகையில் யானை, காட்டு மாடு, மான்கள், காட்டுப்பன்றி ஆகியவை அதிகம் தென்படும். அவ்வப்போது புலி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும்.இது ஒருபுறம் இருக்க படகு நிறுத்தப் பகுதிக்கு அருகே யானைகள் நேற்று முன்தினம் பகலில் உலா வந்ததால் சுற்றுலா பயணிகள் கூடுதல் மகிழ்ச்சி அடைந்தனர். அவற்றை போட்டோ, வீடியோ எடுத்து மகிழ்ந்தனர். யானைகள் அப்பகுதியில் நீண்ட நேரம் முகாமிட்டிருந்ததால் படகு சவாரிசெய்ய சுற்றுலா பயணிகள் செல்ல முடியாமல் காத்திருந்தனர். வனப்பகுதிக்குள் சென்றபின் படகு சவாரி செய்ய சென்றனர்.