எம்.டி., டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் சிகிச்சை பெறுவதில் சிரமம்
கம்பம் : கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் அரசு மருத்துவமனைகளில் எம்.டி., டாக்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பொது மக்கள் சிகிச்சையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தேவையான எண்ணிக்கையில் டாக்டர்கள் இல்லாமல் இருப்பது, குறிப்பிட்ட சில நோய்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை கிடைக்காதது, மருந்து மாத்திரைகள் தட்டுப்பாடு, படுக்கை வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் இருப்பது என அரசு மருத்துவமனைகளில் பிரச்னைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.குறிப்பாக எம்.டி., டாக்டர்கள் இல்லாமல் இருப்பதால் சிகிச்சை பெறுவதில் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். இதய நோய் சிகிச்சைக்கு எம்.டி. டாக்டர் பணியிடம் அவசியமாகும். கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார் என இந்த தாலுகாக்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் எம்.டி. டாக்டர் பணியிடங்கள் இல்லாதது பொது மக்களுக்கு அவதியை ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சைகள் நடக்கும் போது எம்.டி., மருத்துவம் படித்த டாக்டர்கள் ஆலோசனை அவசியம். மேலும் தற்போது அரசு மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காசநோய் பரிசோதனை செய்ய தினமும் 30 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு எடுக்கும் எக்ஸ்ரே படங்களை பார்த்து, காச நோய் தாக்கி உள்ளதா என்பதை உறுதி செய்ய எம்.டி., டாக்டர்கள் வேண்டும். ஆனால் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் அரசு மருத்துவமனைகளில் எம்.டி., டாக்டர் பணியிடங்கள் இல்லை. எனவே தேவையான எண்ணிக்கையில் குறைந்தது ஒருவரையாவது அரசு மருத்துவமனைகளில் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.