உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய ரோடு சீரமைக்காததால் அவதி தேனி நகராட்சி 26வது வார்டில் மக்கள் சிரமம்

பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய ரோடு சீரமைக்காததால் அவதி தேனி நகராட்சி 26வது வார்டில் மக்கள் சிரமம்

தேனி: தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டில் பாதாள சாக்கடை குழாய் அமைக்க தோண்டப்பட்ட ரோடு முறையாக சீரமைக்காததால் பேவர் பிளாக் ரோடு சேதமடைந்துள்ளது. இரவில் துரத்தும் நாய்களால் குடியிருப்போர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கவுன்சிலர் இல்லாததால் அதிகாரிகளும் வார்டு பகுதியை கண்டு கொள்வதில்லை என மக்கள் புலம்புகின்றனர்.தேனி நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டில் பாரஸ்ட்ரோடு 5வது குறுக்குத்தெரு, 7, 8 வது தெருக்கள் உள்ளன. இதில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த வார்டு கவுன்சிலர் பிரிட்டிஷ் கடந்தாண்டு இறந்தார். இதன்பிறகு இந்த வார்டில் அடிப்படை பிரச்னைகள் சீரமைக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வில்லை என்பது வார்டு பொதுமக்களின் குமுறலாக உள்ளது.இங்குள்ள 5வது குறுக்குத்தெருவில் பல இடங்களில் சாக்கடை சேதமடைந்துள்ளது. மழைகாலங்களில் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இந்த தெருவின் கிழக்கு பகுதியில் வால்கரடு அமைந்துள்ளது. இப்பகுதியில் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பை, தனியார் குப்பை கொட்டப்படுகிறது. சில நாட்கள் அதனை நகராட்சி நிர்வாகத்தினர் சுத்தம் செய்கின்றனர். சில நேரங்களில் சமூக விரோதிகள் குப்பைக்கு தீ வைத்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதனால் ஏற்படும் நச்சு புகையால் குடியிருப்போர் பாதிக்கப்படுகின்றனர்.இங்கு அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு ஓராண்டாக மோட்டார் பழுதால் செயல்பாடின்றி உள்ளது. அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும், இப்பகுதியில் உள்ள சாக்கடைகளை துார்வார வேண்டும், மழைகாலத்தில் கொசு மருந்து தெளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். மக்கள் பிரதிநிதி இல்லாததால் நகராட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை இந்த வார்டும் பயன்பெறும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.

ரோட்டை சீரமைக்க வேண்டும்

ஆனந்த், பாரஸ்ட்ரோடு 5வது தெரு, தேனி:பேவர் பிளாக் கற்கள் அமைத்து ரோடுகள் நன்றாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடை திட்டத்திற்காக ரோட்டினை தோண்டி வேலை பார்த்தனர். பின்னர் ரோட்டை சரியாக சீரமைக்கவில்லை. இதனால் பல இடங்களில் மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் முதியவர்கள் நடந்து செல்லும் போதே தடுமாறி விழும் நிலை உள்ளது. சிரமைக்க முயன்ற போது கற்கள் காணாமல் போயின. ரோட்டினை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய்கள் அதிகம்

சுப்புராஜ்,பாரஸ்ட்ரோடு 5வது தெரு, தேனி:நாய்கள் தொல்லை அதிக அளவில் காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வர பலரும் நடுங்குகின்றனர். டூவீலர்களில் வருவோரை விரட்டுவதால் பலரும் தடுமாறி விழுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !