உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க அனுமதி

50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க அனுமதி

உத்தமபாளையம்:நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்க 10 பேருக்கு கால்நடை பராமரிப்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.கிராமப் புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நாட்டு கோழி வளர்ப்பு திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு 250 நாட்டுக்கோழி குஞ்சுகள் மற்றும் பராமரிப்பு செலவுகள், கொட்டகை அமைத்தல் இலவசமாக செய்து தரப்பட்டது.ஆனால் இந்தாண்டு இத் திட்டத்தின் கீழ் 50 சதவீத மானியத்தில் மாவட்டத்திற்கு 10 பேர் வீதம் மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் பயனாளிகள் 50 சதவீத தொகை செலுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களுக்கு 360 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இதில் ஒரு பயனாளிக்கு 4வார வயதுள்ள 250 நாட்டு கோழி குஞ்சுகள் வழங்கப்படும். மொத்த தொகை ( குஞ்சுகள் விலை, கொட்டகை அமைத்தல், தீவனம் ) ரூ.2 லட்சத்து 18 ஆயிரமாகும். அதில் 50 சதவீத மானியமாக அரசு ரூ. ஒரு லட்சத்து 9 ஆயிரம் வழங்கும். மீதி தொகையை பயனாளி செலுத்த வேண்டும் . பயனாளிகள் கூறுகையில், 'இந்த திட்டத்தில் வட்டாரத்திற்கு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. வட்டாரத்திற்கு 15 முதல் 25 பேர்கள் வரை அனுமதிக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் முற்றிலும் இலவசமாக தரப்பட்டது. ஆனால் இப்போது 50 சதவீதம் செலுத்த கூறுகின்றனர். கிராமங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த என்பவர்கள், ரூ. ஒரு லட்சத்து 9 ஆயிரத்தை எப்படி செலுத்த முடியும். எனவே பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். முற்றிலும் இலவசம் என அரசாணை பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை