ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கோரி கலெக்டரிடம் மனு
தேனி: ஆண்டிபட்டி நகர் பகுதியில் ரோட்டில் இடையூறாக வாகனங்களை நிறுத்துவதால் ஏற்படும் நெருக்கடியை கட்டுப்படுத்தகோரி கலெக்டரிடம் சமூக பொது நல இயக்க நிர்வாகி பாண்டி மனு அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட சமூக பாதுகாப்பு அலுவலர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் உரிமைத்தொகை வழங்க கோரி பலர் மனு அளித்தனர். ஆண்டிபட்டி சமூக பொது நல இயக்க நிர்வாகி பாண்டி மனுவில், 'ஆண்டிபட்டியில் தேசிய நெடுஞ்சாலையில் தாலுகா அலுவலக பகுதியில் அதிகமாக வாகனங்கள் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர்பகுதியில் இடையூறுாக வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றிருந்தது. வி.சி.க., மாவட்ட செயலாளர் ரபீக் தலைமையில் கட்சியினர் வழங்கிய மனுவில், 'கெங்குவார்பட்டி பேரூராட்சி 4வது வார்டு பகவதி நகரில் குறிப்பிட்ட சமூகத்திற்கு சொந்தமான மயானத்திற்கு செல்லும் பாதையை சிலர் ஆக்கிரமித்து உள்ளனர். பாதை ஆக்கிமிப்பை அகற்றவும், மயானத்தில் காத்திருப்போர் அறை, மோட்டார் தண்ணீர் தொட்டி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றிருந்தது. தமிழ்நாடு நாயுடு நாயக்கர் உறவின் முறை பாதுகாப்பு இயக்க மாநில நிர்வாகி சந்தோஷ் தலைமையில் நிர்வாகிகள் வழங்கிய மனுவில், சமூக வலைதளத்தில்நாயுடு சமுதாய பெண்கள் பற்றி தவறாக பேசிய ஐந்தாம் தமிழ்சங்க தலைவர் பாண்டியன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஇருந்தது.