போடி மெயின் ரோட்டில் பிளக்ஸ் பேனர் ஆக்கிரமிப்பு
போடி: போடி மெயின் ரோட்டை ஆக்கிரமித்து பிளக்ஸ், பேனர்கள் வைத்து வருவதால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து வருகின்றனர். வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் நெடுஞ்சாலை, நகராட்சி, பேரூராட்சி மெயின் ரோட்டின் அருகே பிளக்ஸ், பேனர் விளம்பர பலகைகள் வைக்க கூடாது என மதுரை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது. ஆனால் போடி பஸ்ஸ்டாண்ட், காமராஜ் பஜார், தேவாரம் ரோடு, சார்பதிவாளர் அலுவலகம் அருகே, பழைய பஸ்ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் அரசியல் கட்சியினர், தனிநபர்கள் ரோட்டை ஆக்கிரமித்து அரசியல் கட்சி கூட்டம், குடும்ப விழாக்களுக்கும் பேனர், பிளக்ஸ், விளம்பர பலகைகள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அனுமதி இன்றி வைக்கப்படும் பேனர்களை அதிகாரிகள், போலீசாரும் கண்டு கொள்வது இல்லை. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுவதோடு அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. வர்த்தகர்கள், சிறு வியாபாரிகளும் பாதிக்கின்றனர். பொதுமக்கள் டூவீலர், நடந்து கூட செல்ல முடியாத நிலையில் சிரமம் அடைந்து வருகின்றனர். பொது மக்களின் சிரமங்களை தவிர்க்கும் வகையில் போடி மெயின் ரோட்டில் வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ், பேனர்களை அகற்றி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.