போடிமெட்டில் அத்துமீறல் மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள்
போடி:தமிழகம் -- கேரளாவை இணைக்கும் வழித்தடத்தில் போடிமெட்டு உள்ளது. சமீபத்தில், கேரளா திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மூட்டை மூட்டையாக திருநெல்வேலியில் கொட்டப்பட்டன. பசுமை தீர்ப்பாய உத்தரவால் மீண்டும் கேரளாவிற்கு கழிவுகள் கொண்டு செல்லப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் போடிமெட்டு ஐந்தாவது வளைவின் பள்ளத்தில், பிளாஸ்டிக் பைகளில் மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன. குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, மூட்டைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன், உணவு கழிவுகள் இருந்தன.கேரளாவில் இருந்து தமிழகம் வருவதற்கு முக்கிய வழித்தடமாக போடிமெட்டு எல்லை பகுதி உள்ளது. இங்கு, கேரள - தமிழக போலீஸ், வனத்துறை செக்போஸ்ட் இருந்தும், வாகனங்களை சரிவர சோதனை செய்யாததால் பிளாஸ்டிக், பாலிதீன், உணவு கழிவுகளை, தமிழக மலைப்பகுதியான போடிமெட்டில் கொட்டி செல்கின்றனர். இதனால், வன உயிரினங்கள் பலியாகும் அவலம் உள்ளது.தேனி கலெக்டர் ஷஜீவனா, 'குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்த பிறகும், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்கிறது.