லாட்ஜ் அறையில் இறந்த ராணுவ வீரர் புகையால் மூச்சு திணறலா என போலீஸ் விசாரணை
உத்தமபாளையம்: உத்தமபாளையம் லாட்ஜ் அறையில் அனுமந்தன்பட்டி ராணுவவீரர் ஜெயமாருதி 28, இறந்து கிடந்தார். மெத்தையில் பற்றிய சிகரெட் தீ புகையால் இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.உத்தமபாளையத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் லாட்ஜ் உள்ளது. நேற்று முன்தினம் இங்கு வந்த மதுரை மாவட்டம், சக்கிமங்கலம் அருகே உள்ள இளமனூரில் வசிக்கும் முனியாண்டி மகன் ஜெயமாருதி 28, அறை எடுத்து தங்கியுள்ளார். இவர் பஞ்சாப்பில் இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்தமபாளையம் அருகில் உள்ள அனுமந்தன்பட்டியாகும். திருமணம் முடித்ததால் மாமனார் ஊரில் குடும்பத்துடன் வசிக்கிறார். அனுமந்தன்பட்டியில் திருமணத்தில் பங்கேற்க வந்தவர் தனது பழைய நண்பர்களை அழைத்து மது விருந்து கொடுத்துள்ளார். இரவு நண்பர்கள் சென்றபின் அறைக்கதவை தாளிட்டு படுத்தவர் நீண்ட நேரமாக காலையில் அறைக்கதவு திறக்கவில்லை. கதவு இடுக்கு வழியாக புகை வந்துள்ளது. சந்தேகமடைந்த லாட்ஜ் நிர்வாகிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் வந்து கதவை திறந்து பார்த்த போது, படுக்கையில் ஜெயமாருதி இறந்து கிடந்தார். படுக்கை முழுவதும் எரிந்து கருகிய நிலையில் இருந்துள்ளது. சிகரெட் புகைத்து அதனை அணைக்காமல் படுத்ததால் தீ மெத்தையில் பற்றி புகை மூட்டத்தில் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றும் போலீசார் கூறுகின்றனர். இவருக்கு சுமதி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். உத்தமபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.