வால்கரடு வனப்பகுதியில்பாலிதீன் குப்பை அகற்றம்
தேனி : உலக வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு தேனி வனச்சரகம், கம்மவார் பாலிடெக்னிக் மாணவர்கள், தன்னார்வலர்கள் மூலம் 1500 கிலோ பாலிதீன் குப்பை வால்கரடு காப்புக் காடுகளில் இருந்து அகற்றினர். நிகழ்ச்சிக்கு கலெக்டர் ரஞ்ஜீத் குமார் தலைமை வகித்து, வனவிலங்குகளை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பின்,' அவசியம் குறித்து விளக்கினார். மாவட்ட வன அலுவலர் அருண்குமார், உதவி வன பாதுகாவலர் சிசில் கில்பர்ட், தேனி ரேஞ்சர் சிவராம், தேனி நகராட்சி கமிஷனர் பார்கவி, மாவட்ட கவுரவ வனவிலங்கு காப்பாளர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் வேம்பு, புங்கன், நாவல், பாதாம் மரக்கன்றுகளை வால்கரடு காப்புக்காட்டில் நடவு செய்தனர். பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தவிர்ப்போம், வனவாழ்வை காப்போம்.' என்ற தலைப்பில் உறுதி மொழி ஏற்ற மாணவர்கள் வால்கரடு பகுதிகளில் பாலிதீன் கழிவுப் பொருட்கள் அகற்றும் பணிகளை மேற்கொண்டனர். நிகழ்வில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அனைவரும் கலெக்டர் மஞ்சள் பை வழங்கினார். கூடலுார்: ஸ்ரீவி., மேகமலை புலிகள் காப்பகத்தில் வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கம்பம் மேற்கு வனச்சரகம் சார்பில் நேற்று குமுளியிலிருந்து லோயர்கேம்ப் வரையுள்ள 6 கி.மீ., தூர மலைப்பாதையில் ரேஞ்சர் ஸ்டாலின் தலைமையில் பாலிதீன், குப்பை அகற்றும் பணி நடந்தது. மலைப்பாதையில் பயணிகளால் விட்டுச் சென்ற 450 கிலோ பாலிதீன் குப்பையை அகற்றி கூடலுார் நகராட்சியில் ஒப்படைக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு வனப்பகுதி பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டி நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இப்பணியில் வனவர்கள் ரகுபதி, தர்மசக்தி, மகேஸ்வரன், கம்பம் ஆன்ஸ் பள்ளி மாணவர்கள், நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.