உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பீர்மேடு சப் ஜெயிலில் கைதி துாக்கிட்டு தற்கொலை

பீர்மேடு சப் ஜெயிலில் கைதி துாக்கிட்டு தற்கொலை

மூணாறு: பீர்மேடு சப் ஜெயிலில் 'போக்சோ' வழக்கில் தொடர்புடைய கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இடுக்கி மாவட்டம் குமுளி அருகே பளியகுடியைச் சேர்ந்தவர் குமார் 35. இவர், மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மனைவியின் புகாரின் பெயரில் குமுளி போலீசார் ஓராண்டுக்கு முன்பு 'போக்சோ' வில் கைது செய்தனர். அந்த வழக்கில் பீர்மேடு சப் ஜெயிலில் குமார் ரிமாண்ட் செய்யப்பட்டார். வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியது. இந்நிலையில் குமார் நேற்று சிறையில் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை உணவு வாங்கிய குமார் துவைத்து காய வைத்த உடைகள் கீழே விழுந்து மண்ணாகி விட்டதாகவும், அதனை சுத்தம் செய்வதற்கு சிறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். அவர் சிறையினுள் விவசாய பணிகள் செய்து வந்ததுடன், வேறு எவ்வித புகார்களும் இல்லை என்பதால் உடைகளை சுத்தம் செய்வதற்கு அனுமதி அளித்தனர். வெகு நேரம் ஆகியும் குமாரை காணவில்லை. சிறையில் போலீசார் தேடிய போது கழிவறையில் தூக்கிட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பீர்மேடு தாலுகா மருத்துவமனைக்கு குமாரின் உடலை கொண்டு சென்றனர். பீர்மேடு டி.எஸ்.பி. விஷால் ஜான்சன் சிறையில் விசாரணை நடத்தினார். சமீபகாலமாக குமார் மரணம் குறித்து சம்பந்தம் இல்லாமல் பேசி வந்ததாக சக கைதிகள் தெரிவித்தனர். உயர் அதிகாரிகளின் விசாரணைக்கு பிறகு குமாரின் உடல் இன்று (செப்.27) இடுக்கி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை