அனுமதி இல்லாத பிளே ஸ்கூல், நர்சரி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு குழு மனு
தேனி: மாவட்டத்தில் அனுமதியின்றி, பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் நடத்தப்படும் 'பிளே ஸ்கூல், நர்சரி' பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு குழு சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் நேரு, சமூக பாதுகாப்பு திட்ட மாவட்ட அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, உள்ளிட்டோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் இலவச வீட்டு மனைபட்டா, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 395 மனுக்களை வழங்கினர்.அனைத்து தனியார் பள்ளிகளின் பாதுகாப்பு குழு தலைவர் தேவகுமார், செயலாளர் தனசேகரன் வழங்கிய மனுவில், மாவட்டத்தில் அரசு அங்கீகாரம் பெறாமல் வீடுகளிலும், மாடிகளிலும் பிளே ஸ்கூல், நர்சரி பள்ளிகள் அதிகம் இயங்குகின்றன. இங்கு குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. தனியார் பள்ளி கல்வி அலுவலகத்தில் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. உயிர்சேதங்கள் ஏற்படும் முன் தகுதியில்லாத பள்ளிகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர்.போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் காமுகுல ஒக்கலிக்கர் சமுதாய நாட்டாமை ராஜேந்திரன் தலைமையில் வழங்கிய மனுவில், 'தங்கள் சமுதாயத்திற்கு சொந்தமான கோயில் முன் உள்ள காலியிடத்தை பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் அந்த இடத்தில் மற்றொரு சமுதாயத்திற்கான விளையாட்டு மைதானம் என பதாகை வைத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என இருந்தது. ஆ ர்ப்பாட் டம்
வண்ணார் எழுச்சி பேரவை மாவட்ட தலைவர் பரமன் தலைமையில் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில், 'பழனிசெட்டிபட்டி ஆற்றங்கரையில் சலவை துறையில் சலவை கூடம் கட்டித்தர வேண்டும். சலவைத்துறையில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' உள்ளிட்ட 6 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. அரளி விதை யுடன் வந்த பெண்
மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் போலீசார் பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்து கொண்டிருந்தனர். மனு அளிக்க வந்த பெண் ஒருவர் கொண்டு வந்த கைப்பையை சோதனை செய்த போது அதில் அரளி விதை இருந்தது. விசாரணையில் அவர் கோம்பை கிழக்கு தெரு சுரேஷ்குமார் மனைவி ஜெயலட்சுமி 37 என தெரிந்தது. வங்கியில் சில ஆண்டுகளுக்கு முன் கடன் வாங்கி பாதி செலுத்திய நிலையில், மகனின் உயர்கல்வி படிப்பிற்காக கல்வி கடன் கேட்டுள்ளார். வங்கியில் ஏற்கனவே கடன் உள்ளதால், கல்வி கடன் மறுத்துவிட்டனர். உயர்கல்வி தொடர கடன் வழங்க நடவடிக்கை எடுக்க கோரி அரளி விதையுடன் வந்ததாக தெரிவித்தார். தாமத மும், அ வதியும்
குறைதீர் கூட்டம் துவங்கும் முன் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடக்கிறது.இதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் பலரும் குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். ஆனால், குறைதீர் கூட்டம் 10:45 மணிக்கு மேல் துவங்கியது. இதனால் மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசாரும் அவதியடைந்தனர்.