சாக்கலுாத்து மெட்டு ரோடு அமைக்க கோரி ஆர்ப்பாட்டம்
தேவாரம்: சாக்கலூத்துமெட்டு ரோடு அமைக்க வனத் துறையை வலியுறுத்தி பாண்டியர் குல வணிகர் சங்கம், விவசாயிகள் சார்பில் தேவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு ரோடு உள்ளது. இது போல தேவாரம் சாக்கலூத்து மெட்டு ரோடு திட்டமும் உள்ளது. கேரள நெடுங்கண்டத்திற்கு தேவாரத்தில் இருந்து 50 கி.மீ., சுற்றிச் செல்ல வேண்டும். உடும்பன்சோலை செல்ல 60 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். குறைந்தது 2 மணி நேரம் ஆகும். ஆனால் தேவாரம் மேட்டுப்பட்டியில் இருந்து சாக்கலூத்துமெட்டு வழியாக 22 கி.மீ., தூரம் உள்ள நெடுங்கண்டத்திற்கு அரை மணி நேரத்திலும், உடும்பன்சோலைக்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். இதன் மூலம் 38 கி.மீ., தூரமும், ஒன்றரை மணி நேரமும் குறைகிறது. கேரள நெடுங்கண்டத்தில் இருந்து சாக்கலூத்துமெட்டு வரை ரோடு வசதி உள்ளது. ஆனால் தமிழக பகுதியான டி.மேட்டுப்பட்டி மலை அடிவாரத்தில் இருந்து 4 கி.மீ., தூரம் உள்ள சாக்கலூத்துமெட்டு பாதை வசதி இருந்தும், ரோடு வசதி இல்லை. 44 ஆண்டுகளாக சாக்கலூத்துமெட்டு ரோடு திட்டம் வனத்துறையின் முட்டுக்கட்டையால் கிடப்பில் உள்ளன. சாக்கலூத்துமெட்டு ரோடு அமைக்க வனத்துறையை வலியுறுத்தி பாண்டியர் குல வணிகர் சங்கம் சார்பில் தலைவர் குணசேகரன் தலைமையில் தேவாரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நா.த.க., பொறுப்பாளர்கள் ராஜன் தாமஸ், கருப்பையா உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.