சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனியில் புதிய தமிழகம் கட்சியினர் மறியல்
தேனி:தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கையை வலியுறுத்தி தேனியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடத்தும் பொதுக்கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதிய தமிழகம் கட்சியினர் கலெக்டர் அலுவலகம் முன் ரோடு மறியலில் ஈடுபட்டனர். தேனி பங்களாமேட்டில் நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் பிரிவில் இருந்து வெளியேற்றக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக சீமான் தேனி மாவட்டத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி சார்பில் தென்மாவட்டங்களில் தேவேந்திரகுல வேளாளர் சமூக இளைஞர்கள் படுகொலையை கண்டித்தும், கள் உணவு என்று பிரசாரம் செய்யும் சீமானை கண்டித்தும் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். ஐ.டி., பிரிவு மாநில நிர்வாகி சங்கர்குரு, நிர்வாகிகள் வேல்மணி, அய்யனார், பவுன்ராஜ் உடனிருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென கொச்சி -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் டி.எஸ்.பி., தேவராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 'சீமான் பொதுக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது, அக் கொடியை பயன்படுத்தி ஆட்களை அழைத்து வரக்கூடாது. பயன்படுத்தினால் எதிர்வினை ஆற்றுவோம்,' என்றனர். போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கலைந்து சென்றனர். ஐ.டி., பிரிவு மாநில நிர்வாகி சங்கர்குரு கூறுகையில், 'திருவள்ளுவர் கள் உண்ணாமை என்ற அதிகாரம் எழுதி உள்ளார். ஆனால், அதனை உணவு என சீமான் பேசிவருகிறார். இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிற ஒரு சமூகத்தின் குல தொழில் பனை ஏறுவது, கள் விற்பனை செய்வது என பேசி வருகிறார். அதற்கு எதிராக புதிய தமிழகம் கட்சி பேசுகிறது என துாண்டிவிடுகிறார். ஒவ்வொரு ஜாதியின் பெருமையை தனித்தனியாக பேசி பிரிவினை ஏற்படுத்துகிறார். இந்தியர் என்ற ஒற்றுமைக்கு எதிராக பேசுகிறார். இதனால் தான் நாம்தமிழர் கட்சியை தடை செய்ய கோருகிறோம். அவரது கொள்கையையும் எதிர்த்து வருகிறோம் என்றார்.