அறுவடை துவங்கியதால் நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரிக்கை
கம்பம் : 'கம்பம் பள்ளத்தாக்கில் முதல் போக நெல் அறுவடை துவங்க உள்ள நிலையில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்க வேண்டும்' என விவசாய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கம்பம் பள்ளத்தாக்கில் இருபோக நெல் சாகுபடி முல்லைப் பெரியாறு பாசனத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பல சிரமங்களுக்கு இடையே சாகுபடி செய்து அறுவடை துவங்கும் போது கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிப கழகம் முன்வருவது இல்லை என குற்றச்சாட்டு உள்ளது. தனியார் வியாபாரிகள் உடனே ரொக்கம் என்ற ஆசை வார்த்தையை கூறி விலையை குறைத்து வாங்கி செல்கின்றனர். அறுவடை முடிந்த பின் கொள்முதல் நிலையம் துவங்குவது தான் பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது. தற்போது கம்பம் ஆங்கூர் பாளையம், மஞ்சக்குளம், சாமாண்டிபுரம் போன்ற பகுதிகளில் அறுவடை துவங்க உள்ளது. நேற்று முன்தினம் அறுவடை துவங்க திட்டமிட்டிருந்த நிலையில், திடீர் மழை காரணமாக பணிகள் மேற்கொள்ளவில்லை. இருந்த போதும் நேற்று அறுவடை பணிகள் துவங்கின. எனவே நுகர்பொருள் வாணிய கழகம் உடனே கம்பத்தில் நேரடி கொள்முதல் நிலையத்தை திறக்க கம்பம் விவசாயிகள் சங்க செயலாளர் சுகுமாறன், நிர்வாகி ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில், ''அறுவடை துவங்குவதற்கு முன் நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும். அதுவே பலன் தரும். அறுவடை துவங்கி விட்டால் விவசாயிகளால் நெல்லை இருப்பு வைக்க முடியாது. இதை அதிகாரிகளிடம் கூறினால், 'முதலில் கடிதம் கொடுங்கள். பின்னர் நாங்கள் திறக்கிறோம்' என்று கூறி, 50 சதவீத அறுவடை முடிந்த பின் கொள்முதல் நிலையம் திறப்பது வாடிக்கையாக உள்ளது. இம் முறையாவது முன்கூட்டியே திறக்க கலெக்டர் ரஞ்ஜீத்சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.