உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / மினிபூங்காவாக மாறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீடு: வீட்டுத்தோட்டங்கள் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தல்

மினிபூங்காவாக மாறிய ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீடு: வீட்டுத்தோட்டங்கள் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி அசத்தல்

--பெரியகுளம் தென்கரை என்.ஜி.ஓ., காலனியில் 5 சென்ட் இடத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் கலைச்செல்வியின் வீடு அமைந்துள்ளது. மொத்தம் உள்ள இடத்தில் ஒரு பகுதியில் துளசி மாடம் துவங்கி தரைத்தளம் மட்டும் இன்றி மாடி வரை வெற்றிலைக்கொடி, துளசி, ஓமவல்லி, செம்பருத்தி, பாரிஜாதம், முருங்கை, தவசு முருங்கை, கல்யாண முருங்கை, ஆடா தொடை, நெல்லி, அவகோடா, தென்னை, வாழை மரங்கள் வீட்டோடு வீடாக வளர்ந்துள்ளன. சீத்தாமரம், மாதுளை, எலுமிச்சை மரங்கள் என மரங்கள் வீட்டைச் சுற்றி அணிவகுத்து நிற்கின்றன. சங்குப்பூ, ரோஜாப்பூ, அடுக்கு மல்லி, திருவாச்சி மல்லி, கனகாம்பரம், அரளி, செவ்வரளி, ஜாதிப்பூ, செண்பகப்பூ, சம்பங்கி, பால்கம் பூச்செடிகளை தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். உயிரிழந்த தனது கணவர் ரெங்கநாதன் நினைவாக கடந்த 20 ஆண்டுகளாக தனது மகன்கள் சுந்தரேசன், கார்த்திகேயன், மருமகள்கள் கூட்டணியில் 'பிருந்தாவனம் பறவைகளின் சங்கமம்' என மினி பூங்காவிற்கு பெயரிட்டு, குடும்பமே பராமரித்து வருகின்றனர். மினி பூங்காவில் வடகிழக்கு பருவ மழையின் சாரலில் ஒவ்வொரு தென்னை, அவகொடா மரங்களிலும், பறவைகள் தங்கும் இடத்திலும் சிட்டுக்குருவி, மைனா உட்பட பறவை இனங்கள் தங்களது துணையுடன் ஒதுங்கியபடி உணவு சேமிப்பு குடுவைகளில் நிரப்பப்பட்டுள்ள கம்பு, சோளம் உட்பட தானியங்களை சுவைத்துச் செல்கின்றன. இலவச கீரை வழங்கல் கலைச்செல்வி, ஓய்வு பெற்ற அரசு பணியாளர் : செடி வகையில் துளசி செடி, கருந்துளசி, பச்சிலை, லட்சக்கொட்டை கீரை (நஞ்சுண்டான்கீரை) உள்ளது. அருகாமையில் உள்ள வீடுகளுக்கு சமையலுக்கு முருங்கை கீரை உட்பட அனைத்து கீரை வகைகளும் இலவசமாக கொடுக்கிறோம். எனது கணவர் ரெங்கநாதன் நட்டு வைத்த தென்னக்கன்று தென்னை மரமாக வளர்ந்துள்ளது. அவரது நினைவாக அந்த மரத்திற்கு அவ்வப்போது பூஜை செய்து வருகிறேன். இங்குள்ள ஒவ்வொரு மரங்களுக்கும் சென்னையில் படிக்கும் எனது பேரன்கள், பேத்திகள் பிரசன்னா, முகிலன், திவ்யஸ்ரீ பெயரிட்டு மகிழ்வது இன்றளவும் தொடர்கிறது. டீ தூள், காபி துாள் கரைசல் செடிகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது தோட்டத்தில் விழுகின்ற இலைகள், காய்கறி கழிவுகள், ஆடு, மாடுகளின் எருக்கள், வாழைப்பழத் தோல், முருங்கை இலைப்பொடி, சுண்டல், சோயா பீன்ஸ் போன்றவற்றை ஊறவைத்து நீர், புளித்த மோர், இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, மூலிகைச் செடிகள், பிற பூச்செடிகளை பராமரித்து வருகிறோம். 'மினி பூங்கா'வில் தினமும் ஒரு மணி நேரம் வேலை செய்யும் போது, மனம் உற்சாகம் அடைகிறது., என்றார். மினிபூங்காவால் மகிழ்ச்சி கார்த்திகேயன், ஐ.டி., பணியாளர், சென்னை: 'பிருந்தாவன் மினி பூங்கா'வில் எங்கள் வீட்டு குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொரு பிறந்த நாளான்றும் புதுப்புது செடிகள் நட்டு பராமரித்து வருகிறோம். அந்த செடிகளை ஆண்டுதோறும் பிறந்தநாள் அன்று பார்க்கும் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். அதனாலேயே வீட்டுத் தோட்டம், மாடித்தோட்டம் அமைக்க எனது நண்பர்கள், உறவினர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். சென்னையில் இருந்து தினமும் 'வீடியோ கான்ப்ரன்ஸ்' வழியாக பூங்காவை பார்க்காமல் ஒரு நாளை கூட என்னாள் கடந்து செல்ல இயலாது. ஊருக்கு வரும்போது புதிது, புதிதாக 10 செடிகள் நடுவது பல ஆண்டு பழக்கமாகவே மாறிவிட்டது. மினி பூங்கா, பூங்காவாக வளர்ச்சி அடைவதற்கு குடும்பத்தோடு உழைத்து வருகிறோம்., என்றார். -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை