வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ‛ஸ்டிரைக்
தேனி: வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 189 பேர் விடுப்பு எடுத்ததால் பணிகள் பாதிக்கப்பட்டன. காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்த உரிய அவகாசம், நிதி ஒதுக்கீடு, உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும், சீனியாரிட்டி நிர்ணயம் செய்வதில் குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்தத்தை துவங்கினர். இதனால் கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் தாலுகா அலுவலகங்களில் குறைந்த அலுவலர்களுடன் இயங்கியது. இதனால் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. மாவட்டத்தில் வருவாய்த்துறைக்கு 759 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 572 பேர் பணிபுரிகின்றனர். இவர்களில் நேற்று 189 பேர் தற்செயல் விடுப்பு எடுத்து ஸ்ட்ரைக்கில் பங்கேற்றனர்.