சேதம் அடைந்த தடுப்பு சுவரால் விபத்து அபாயம்
போடி: உப்புக்கோட்டை வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து முல்லை ஆற்றிற்கு செல்லும் பாதையில் சாக்கடை தடுப்புச் சுவர் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சீரமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.போடி ஒன்றியம், உப்புக்கோட்டையில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இப்பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அருகே முல்லை ஆறு அமைந்து உள்ளது. இந்த ரோட்டின் வழியாக தினம் தோறும் ஏராளமான மக்கள் டூவீலர், டிராக்டரில் சென்று வருகின்றனர். செல்லும் பாதையில் சாக்கடை சிறு பாலம் தடுப்புச் சுவர் சேதம் அடைந்து சீரமைக்கப்படாமல் உள்ளன. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சீராக செல்ல முடியாமல் தேங்குகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் குப்பையை சாக்கடையில் கொட்டி வருகின்றனர். குப்பை அகற்றி தூர்வாரப்படாமல் உள்ளதால் அருகே குடியிருக்கும் மக்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. சேதம் அடைந்த சாக்கடை சிறுபாலம் தடுப்புச் சுவரை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.