ரோட்டோர பள்ளத்தால் விபத்து அபாயம்
தேனி : தேனியில் இருந்து மதுரை செல்லும் தற்காலிக ரோட்டோரத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தினால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மதுரை ரோட்டில் அரண்மனைப்புதுார் விலக்கு பகுதியில் இருந்து சிப்காட் அருகே உள்ள தனியார் பள்ளி வரை மேம்பால பணிகள் நடந்து வருகிறது. இதனால் அரசு ஐ.டி.ஐ., முதல் ஆர்.டி.ஓ., அலுவலகம் செல்லும் சந்திப்பு வரை தற்காலிக ரோடு அமைத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் தெருவிளக்குகள் இன்றி ஒரு பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது.அந்த பகுதியில் ரோட்டோரத்தில் சுமார் 4அடி பள்ளம் சிலாப் கற்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. தற்போது அந்த சிலாப் கற்கள் சேதமடைந்துள்ளன. இதனால் இரவில் டூவீலர்களில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து காயமடையும் சூழல் உள்ளது. வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலையும் உள்ளது. நகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பள்ளத்தை சீரமைக்கவும், ரோட்டினை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.