ரூ.1.15 கோடி மோசடி: குடிநீர் வாரிய கண்காணிப்பாளர் நீதிமன்றத்தில் சரண்
தேனி:தேனி குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் ரூ.1.15 கோடி மோசடி வழக்கில் கண்காணிப்பாளர் முருகானந்தம் தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.குடிநீர் வடிகால் வாரிய கழிவுநீர் அகற்றும் அலுவலகம் தேனி என்.ஆர்.டி., நகரில் செயல்படுகிறது. இங்கு நிர்வாகப் பொறியாளர் கருத்தபாண்டியன், கண்காணிப்பாளர் முருகானந்தம் பணிபுரிந்தனர். இங்கு கோட்ட தலைமை அலுவலக விழிப்புப் பணி அலுவலர் வரதராஜன் தலைமையிலான உயரதிகாரிகள் குழு ஜூன் 6, ஆக.,5, செப்., 24, 26ல் ஆய்வு நடத்தினர்.அதில் 2022 அக்.,1ல் முருகானந்தம் காசோலை மூலம் சென்னை தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.42.29 லட்சம் அனுப்பியுள்ளதை கண்டறிந்தனர். மேலும் அலுவலக வங்கிக் கணக்கில் இருந்து, தனது வங்கிக் கணக்கிற்கு பல்வேறு தேதிகளில் ரூ.75.77 லட்சத்தை மாற்றியுள்ளார். இதில் மொத்தம் ரூ.1.15 கோடி மோசடி செய்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். நிர்வாகப் பொறியாளர் கருத்தப்பாண்டியன் புகாரில் கண்காணிப்பாளர் முருகானந்தம் மீது, மாவட்டக் குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.முருகானந்தம், நேற்று தேனி மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி முன் சரணடைந்தார். அவரை 15 நாட்கள் ரிமாண்டில் வைக்கவும், டிச.,4ல் விசாரணைக்கு ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.