மருத்துவக் கல்லுாரி விடுதிகள் புனரமைக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் உள்ள மாணவ, மாணவிகளின் விடுதி கட்டடங்களின் புனரமைப்பிற்காக ரூ.2 கோடி நிதி மருத்துவக்கல்வி இயக்குனரகம் ஒதுக்கியுள்ளது. இம்மருத்துவக் கல்லுாரி 2004ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் துவங்கப்பட்டது. அப்போது மருத்துவ மாணவர்களின் விடுதி கட்டடம் கட்டப்பட்டது. கல்வி ஆண்டுகளில் அடிப்படையில் தற்போது இளங்கலை எம்.பி.பி.எஸ்., முதுகலை மருத்துவ மாணவ, மாணவிகள் என, 460க்கும் மேற்பட்டோர் மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே வெளியில் தங்கி தினசரி கல்லுாரி வந்து செல்கின்றனர். இதுதவிர கல்லுாரி வளாகத்தில் உள்ள ஸ்கூல் ஆப் நர்சிங் கல்லுாரியில் பயிலும் மாணவிகள் 200 பேர் தனியாக அவர்களுக்கான விடுதியில் தங்கி படித்துவருகின்றனர். இந்நிலையில் முதுகலை மருத்துவ மாணவர்கள் தங்கும் விடுதி கட்டுமானத்திற்காக மருத்துவக்கல்லுாரி நிர்வாகம்கருத்துரு மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்பியுள்ளது. இளங்கலை பொது மருத்துவ மாணவ, மாணவிகளின் பழைய கட்டடங்களைபுனரமைக்க மருத்துவக்கல்வி இயக்குனரகம் மாணவிகள் விடுதிக்கு ரூ.1 கோடி, மாணவர்கள் விடுதிக்கு ரூ.1 கோடி என ரூ.2 கோடி நிதி ஒதுக்கி அனுமதி அளித்துள்ளது. விரைவில் புனரமைப்புப் பணிகள் துவங்க உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.