ஓட்டல்களில் பாலிதீன் கவர் மூலம் சூடான டீ விற்பனை செய்வது அதிகரிப்பு! - நகராட்சி பகுதிகளில் பெயரளவில் நடக்கும் சோதனைகள்
கூடலுார்: மாவட்ட உணவகங்களில் பாலிதீன் கவர் மூலம் சூடான டீ, காபி விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பெயரளவில் நடத்தும் சோதனையால் பொது மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு அதிகரித்துள்ளன. ஓட்டல்களில் சூடான டீ, காபி பாலிதீன் கவர்களில் ஊற்றி விற்பனை செய்கின்றனர். சூடான டீ, காபியை பாலிதீன் கவர்களில் ஊற்றுவதால் நச்சு ரசாயனங்கள் டீயுடன் கலந்து உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் புற்றுநோய் அபாயமும் உள்ளது. பாலிதீன் கவர்களில் இருந்து கசியும் ரசாயனங்கள் குழந்தைகள், கர்ப்பிணிகளை அதிகம் பாதிக்கிறது. பாதிப்பு அதிகம் இருப்பதால் பொது மக்கள் சூடான பொருட்களை பாலிதீன் பைகளில் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என சுகாதாரத் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால், தற்போது ஓட்டல்களில் சூடான டீ, காபி மட்டும் இல்லாது பார்சல் வாங்கும் உணவுகளில் சாம்பார், சால்னாவும் பாலிதீன் கவரில் வைத்து வழங்கப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. நகராட்சிப் பகுதிகளில் அவ்வப்போது பெயரளவில் மட்டுமே உணவு பாதுகாப்புத் துறையினரால் சோதனைகள் நடத்தப்படுகின்றன. சில நகராட்சிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இல்லாததால் பொறுப்பு அலுவலர்கள் பணியில் உள்ளனர். ஆனால் இவர்களால் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு தடுக்க முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு ஒரு முறை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அபராதம் விதிப்பதும் இல்லை. தொடர் ஆய்வு இல்லாததால் கடை உரிமையாளர்களும் இந்த விதிமுறைகளை பின்பற்றுவது இல்லை. நகராட்சி கமிஷனர்கள், மாவட்ட நிர்வாகம், போலீசார் இணைந்து பாலிதீன் பயன்படுத்துவர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் வழக்கு தொடர்வதற்கான வழி வகைகளை மேற்கொள்ள வேண்டும் என தன்னார்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மண் வளம் பாதிப்பு
ராமராஜ், 18ம் கால்வாய் விவசாய சங்க தலைவர், கோம்பை: பாலிதீன் பைகள் மனிதனுக்கு மட்டும் இன்றி விவசாய நிலங்களுக்கும் எதிரானது. பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஏராளமான விளை நிலங்களுக்குள் புகுந்து மண் வளம் பாதிக்கப்படுகிறது. அதேபோல் உடல் நலத்தை கெடுக்கும் வகையில் உள்ள பாலிதீன் பைகளில் உணவுப் பொருட்களை வாங்குவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். இதைத் தவிர்த்து உணவுப் பொருட்களை வழங்கும் வகையில் மாற்று ஏற்பாடாக புதிய முயற்சியை வியாபாரிகள் கையாள வேண்டும். அதற்கு அதிகாரிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த வேண்டும்., என்றார்.