மின் மீட்டர்கள் தட்டுப்பாடு விண்ணப்பித்தோர் அவதி
கம்பம்: மின் மீட்டர்கள் தனியாரிடம் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படும் என்ற அறிவுப்பும் அமல்படுத்தப்படுத்தாத நிலையில் மீட்டர் தட்டுப்பாடு தொடர்கிறது. புதிய இணைப்பு பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். புதிய மின் இணைப்பு பெற பொதுமக்கள் பணம் செலுத்தி, மீட்டர் இன்றி இணைப்பு வழங்காமல் தாமதப்படுத்தும் நிலை பல ஆண்டுகளாக நீடிக்கிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 100 மீட்டர்கள் தருவார்கள். ஆனால் புதிய இணைப்பிற்கு பணம் செலுத்தி காத்திருப்பவர்கள் பல நுாறுபேர் காத்திருப்பார்கள். இதனால் மாநிலம் முழுவதும் மின் இணைப்பு பெற முடியாமல் ஏராளமானோர் புலம்பி வருகின்றனர். வேறு வழியின்றி மீட்டர்களை தனியார் கடைகளில் வாங்கி கொள்ள மின் வாரியம் கடந்தாண்டு அறிவிப்பு வெளியிட்டது. அதன் பின்பும் மீட்டர் வாங்குவது குறித்து தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதனால் பழைய நிலையே தொடர்கிறது. இது தொடர்பாக மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திலும் குறைந்தது 500 பேர் மின் இணைப்பு பெற பணம் செலுத்தி காத்து கிடக்கின்றனர். பல பேர் இணைப்பு வாங்கியும் மீட்டர் இல்லாததால் மின்சாரம் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். மீட்டர் தட்டுப்பாட்டை போக்க வாரியம் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்காத நிலை தொடர்கிறது. புதிய இணைப்பு கேட்டு பணம் கட்டுபவர்களுக்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு பிறகுதான் மீட்டர் தரப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.