உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கூடலுார் குப்பைக் கிடங்கில் வெளியேறும் புகையால் பாதிப்பு - ரோடு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கூடலுார் குப்பைக் கிடங்கில் வெளியேறும் புகையால் பாதிப்பு - ரோடு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

கூடலுார்: கூடலுார் குப்பைக் கிடங்கில் இருந்து வெளியேறும் புகையால் பாதிப்பிற்கு உள்ளாவதைக் கண்டித்து மாநில நெடுஞ்சாலையில் பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.கூடலுார் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளன. இங்கு சேகரமாகும் குப்பை குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பெத்துக்குளத்தில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக இப்பகுதியில் கொட்டப்பட்டு வருவதால் குப்பை மலை போல் குவிந்துள்ளன. இதனால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. அடிக்கடி சிலர் குப்பை கிடங்கில் தீ வைத்து விடுவதால் குப்பையுடன் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து எரிவதால் புகை அதிகமாக வெளியேறுகிறது.காந்திகிராமம், கிராம சாவடி தெரு, காமாட்சி அம்மன் கோயில் தெரு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் புகையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பலருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில நாட்களாக காற்று அதிகமாக வீசுவதால் வெளியேறும் புகை வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வரையிலும், மேற்கு கன்னிகாளிபுரம் வரையிலும் பரவி சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தொடர்ந்து எரியும் தீயை அணைக்க முடியாமல் நகராட்சி நிர்வாகம் போராடி வருகிறது.நேற்று அப்பகுதி பொதுமக்கள் பா.ஜ., கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பெட்ரோல் பங்க் அருகே மாநில நெடுஞ்சாலையில் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நகராட்சித் தலைவர் பத்மாவதி, கவுன்சிலர் லோகந்துரை, சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் நடத்திய பேச்சு வார்த்தையில்,'பெத்துக் குளத்தில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை சுற்றிலும் ரூ.26.25 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைத்து கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குப்பையில் தீ வைக்காத அளவிற்கு பாதுகாக்கப்படும் எனவும், அரசுக்கு சொந்தமான நிலம் ஊருக்கு வெளியே இருந்தால் அதை குப்பைக் கிடங்குக்கு பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வேண்டி பொதுமக்களுடன் இணைந்து நகராட்சி நிர்வாகமும் கோரிக்கை வைக்கப்படும் எனவும் கூறப்பட்டதைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை