மேகமலையில் பனிப்பொழிவு பயணிகள் வருகை குறைந்தது
கம்பம்: மேகமலை மூணாறு போன்ற சீதோஷ்ணநிலையும், கண்ணுக்கு எட்டிய தூரம் தேயிலை தோட்டங்களும், அடர்ந்த வனப்பகுதிகளும், சிறிய நீர்த் தேக்கங்களும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இங்குள்ள ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் ரோட்டை ஒட்டியே இருப்பதால் சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர். மகாராஜா மெட்டு, வியூ பாயிண்டிலிருந்து பார்த்தால் கம்பம், சின்னமனூர், சபரிமலை ஐயப்பன் கோயில் பகுதிகள் தெரியும். தொடர்ந்து பெய்து வந்த மழை சில நாட்களாக இல்லை. தற்போது பனிப்பொழிவு ஆரம்பமாகி உள்ளது. காலை 10:00 மணிவரை பனிமூட்டம் இருப்பதாலும், உச்சபட்ச பனியுடன் கூடிய குளிர் காற்று வீசுவதால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர். சுற்றுலா செல்லும் பயணிகளும் சிரமப்படுகின்றனர், பனிமூட்டம் இருப்பதால், வாகனங்களில் மஞ்சள் விளக்கை எரியவிட்டு செல்லுமாறும், மலைப்பாதைகளில் மெதுவாக செல்லுமாறும் வாகன ஒட்டிகளிடம் வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைந்து வருகிறது.கடந்தாண்டு டிசம்பர் முதல் வாரம் தான் பனிப்பொழிவு ஆரம்பமானது. ஆனால் இந்தாண்டு நவம்பர் இரண்டாவது வாரத்தில் பனிப்பொழிவு ஆரம்பமாகி இருப்பதால் வரும் நாட்களில் உறைபனி பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.