மண் மாதிரி எடுக்கும் பணி நிறைவு; விரைவில் மண் வள அட்டைகள்
கம்பம்; மாவட்டத்தில் இந்தாண்டிற்கான மண் பரிசோதனைக்கென மாதிரிகள் எடுக்கும் பணி நிறைவு செய்யப்பட்டது. விரைவில் மண்வள அட்டைகள் விநியோகம் நடைபெறும் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மே மாதம் வேளாண், தோட்டக் கலைத்துறையினர் மண் பரிசோதனை செய்வது வழக்கம். இதற்கென தங்கள் பகுதியில் உள்ள நிலங்களில் மண் சாம்பிள் எடுப்பார்கள். இந்தாண்டு கம்பத்திற்கு 400, சின்னமனூருக்கு 600, கடமலைக்குண்டு 800 என ஒவ்வொரு வட்டாரத்திற்கும் மண் மாதிரிகள் எடுக்க வேளாண் இயக்குநரகம் இலக்கு நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது. எடுக்கப்படும் மண் மாதிரிகளை ஆய்வக பரிசோதனை செய்து, கிடைக்கும் முடிவின்படி விவசாயிகளுக்கு வேளாண் தொழில் நுட்பங்கள் வழங்கப்படும். இந்தாண்டிற்கான மண் மாதிரிகள் ஜூனில் எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் நடைபெறுகிறது. பரிசோதனைகள் நிறைவு பெற்ற பின் அதன் முடிவுகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். அந்தந்த வட்டாரங்களில் உதவி இயக்குநர்கள் பதிவிறக்கம் செய்து விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்குவார்கள். இது தொடர்பாக வேளாண்,தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், ' கடந்த மே மாதம் பரவலாக மழை பெய்ததால், மண் மாதிரிகள் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. ஈரப்பதம் இல்லாத இடங்களில் சேகரம் செய்து , அலுவலகத்தில் மண்ணை காய வைத்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வக பரிசோதனை நடைபெற்று வருகிறது. விரைவில் மண்வள அட்டைகள் வழங்கப்படும் என்கின்றனர்.