உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / ரூ.11 கோடி மதிப்பில் உத்தமுத்து வாய்க்கால் பராமரிப்பு பணியை வேகப்படுத்துங்க சார்

ரூ.11 கோடி மதிப்பில் உத்தமுத்து வாய்க்கால் பராமரிப்பு பணியை வேகப்படுத்துங்க சார்

கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப்பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் இருபோக நெல் சாகுபடி நடைபெறுகிறது. பி.டி.ஆர்., பெரியாறு கால்வாய் மூலம் 5100 ஏக்கர் ஒரு போக சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இதில் இரு போக நெல் சாகுபடி நடைபெறும் பகுதிகளான கூடலூர் முதல் பழநிசெட்டிபட்டி வரை 17 வாய்க்கால்கள் மூலம் தண்ணீர் விநியோகம் நடைபெறுகிறது. இந்த வாய்க்கால்கள் நீண்ட காலமாக பராமரிப்பின்றி உள்ளது.இதில் முக்கியமானது உத்தமுத்து வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் மூலம் 2500 ஏக்கர் பாசன வசதியளிக்கிறது.சுருளிப்பட்டி ரோட்டில் தொட்டமான் துறையில் துவங்கும் வாய்க்கால் புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி , உத்தமபாளையம், உ. அம்மாபட்டி வரை செல்கிறது. இதன் மொத்த நீளம் 12.6 கி.மீ. ஆகும்.இந்த வாய்க்காலில் 62 மடைகள் உள்ளன. இதில் 35 மடைகள் மிக மோசமாக சேதமடைந்துள்ளன. இரண்டு அணைக்கட்டுகள் ஆகியவற்றை ரூ.11.03 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு செய்யும் பணிகளை நீர்வளத்துறை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதியே துவக்கியது.பணிகள் துவக்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. மே 25 ல் தென் மேற்கு பருவ மழை துவங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. பெரியாறு அணையிலிருந்து ஜூன் முதல் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ளதால் இன்னமும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. முதல் போக பணிகளை விவசாயிகள் துவக்கி விட்டனர்.ஆனால் பராமரிப்பு பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப் பணிகளை நீர்வளத்துறை விரைவு படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்கிடையே அவசரம் அவசரமாக பணிகள் நடைபெறுவதால் அரைகுறையாக நடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. சீரமைப்பு ரூ.11 கோடி என்பதால், பணிகள் நிறைவு பெற்றவுடன் நீர்வளத்துறையின் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.செயற்பொறியாளர், மேற்பார்வை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர்கள் ஆகியோர் ஆய்வு செய்திட வேண்டும். அத்துடன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை