6800 பட்டாக்கள் கணினியில் பதிவேற்றும் பணி துவக்கம்: விவசாய பட்டா வீட்டுமனைகளாக மாறுகிறது
தேனி: மாவட்டத்தில் போடி, சின்னமனுாரில் விவசாய நில பட்டாக்களில் வீடு கட்டி வசித்த 6800 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கும் பணியை சர்வே பிரிவினர் துவங்கி உள்ளனர். இதற்காக பட்டாக்களை கணினி மயமாக்கும் பணி துவங்கி உள்ளது.போடி, சின்னமனுாரில் உள்ள பலரும் தங்கள் நிலங்கள் தொடர்புடைய பட்டாக்கள் கணினியில் இல்லாததால் நிலங்கள் வீட்டுமனைகளை விற்பனை செய்ய முடியாமல் தவித்து வந்தனர். சிலர் அரசு வழங்கிய பட்டாக்ளை வைத்திருந்தாலும் அவை ஆன்லைனில் தவறுதலாக காண்பித்தது. இதற்காக போடி, சின்னமனுார் பகுதியை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகம், தாலுகா, ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் பட்டாவை கணினியில் பதிவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்து வந்தனர். இந்நிலையில் சிலரது மனுவை ஆய்வு செய்த போது பலர் ரய்த்துவாரி எனப்படும் விவசாய நிலத்திற்கான பட்டாக்களை வைத்திருந்தது தெரிந்தது.இதனால் சர்வே துறை சார்பில் அவ்வாறு வீட்டு மனைகளுக்கு விவசாய நிலம் என வழங்கப்பட்ட பட்டாக்கள் எத்தனை என சர்வே பணிகள் துவங்கின. மேலும் சில அரசு பதிவேடுகளில் அந்த நிலங்களில் வீடுகள், வீட்டு மனைகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டதும் கண்டறியப்பட்டது. இவ்வாறு சின்னமனுாரில் 1878, போடியில் 4985 பட்டாக்கள் வீட்டுமனை பட்டாக்களாக மாற்றும் பணி துவங்கியது. இதற்காக சர்வேயர்கள் மூலம் அளவீடு, ஆவணங்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டது. தொடர்ந்து பட்டா உதவியாளர், சர்வேயர், துணைதாசில்தார், முதுநிலை படம் வரைபவர், துணை ஆய்வாளர், தாசில்தார், ஆர்.டி.ஓ., டி.ஆர்.ஓ., கலெக்டர் என 9 அதிகாரிகள் ஒப்புதலுடன் பட்டா மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றும் பணி துவங்கி உள்ளது.இதுவரை போடியை சேர்ந்த 783 பெயருடைய பட்டாக்கள் வீட்டு மனைபட்டாக்களாக மாற்றம் செய்து கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்ற பட்டாக்களும் விரைவில் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இவர்களது இடங்களை விற்பனை செய்வது, வாங்குவதில் இருந்து சிரமம் குறையும் என சர்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.