ஊராட்சிகளில் நிலுவை குடிநீர் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை தேவை
கம்பம்: 'ஜல் ஜீவன்' திட்டத்தில் குடிநீர் கட்டணம் நிர்ணயம் செய்ததில் குளறுபடிகள் நீடிப்பதால், அதனை சீரமைத்து, ஊராட்சிகளில் வசூலிக்கப்படாமல் உள்ள கட்டணத் தொகையை வசூலிக்க கலெக்டர் நடவடிக்கை எடுப்பது அவசியம்' என, கோரிக்கை எழுந்துள்ளது.ஊராட்சிகளில் 'ஜல் ஜீவன்', பேரூராட்சிகள், நகராட்சிகளில் 'அம்ரூத்' என்றும் பெயரிடப்பட்ட குடிநீர் வினியோகத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. முதற்கட்டமாக ஊராட்சிகளுக்கு குடிநீர் உட்கட்டமைப்பை பலப்படுத்தி, அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க, தேவையான குடிநீர் ஆதாரங்களை உருவாக்கவும், பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிட்டது. ஊராட்சியின் பரப்பு, மக்கள் தொகை அடிப்படையில் ரூ.30 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தில் ஊராட்சியில் 500 முதல் 2 ஆயிரம் வரை புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. புதிய இணைப்பு வழங்க டெபாசிட் ரூ.3 ஆயிரம், 10 சதவீத பங்குத் தொகையை ஈவு செய்து, அதாவது அந்த ஊராட்சிக்கு அரசு வழங்கிய நிதியில் மக்களின் பங்கு தொகையை டெபாசிட்டுடன் சேர்ந்து வாங்கவும் கேட்டுக் கொண்டது. இந்த திட்டத்தில் வழங்கப்படும் இணைப்புகளுக்கு மாதந்தோறும் குடிநீர் கட்டணம் ரூ.30 வசூலிக்க நிர்ணயம் செய்தது. ஆனால் ஊராட்சிகளில் ஏற்கனவே குடிநீர் கட்டணம் ரூ.60 வசூலித்து வருவதால், அதையே தொடர்கின்றனர்.டெபாசிட்டுடன் சேர்ந்து வாங்கப்படும் பங்குத் தொகை அந்தந்த ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை பொறுத்து மாறுபடுகிறது. ஒரு ஊராட்சியில் டெபாசிட் ரூ.4 ஆயிரம் என்றும், இன்னொரு ஊராட்சியில் ரூ.2 ஆயிரம் என்றும் மாறி மாறி உள்ளது. இந்நிலையில் ஜல்ஜீவன் திட்ட குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் கட்டணம் ரூ.30 மட்டுமே வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ஊராட்சிச் செயலர்கள் கூறுகையில், 'குடிநீர் கட்டணம் ரூ.60 என வசூலித்து வருகிறோம். அனுமதி தொகையில் வேறுபாடு உள்ளதால், பங்குத்தொகையும் வேறுபடும். எனவே டெபாசிட் ஒரே மாதிரியாக இருக்காது. 'ஜல் ஜீவன்' திட்டத்தில் இணைப்பு இலவசம், கட்டணம் இல்லை என வதந்தி பரப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும் குடிநீர் கட்டண நிலுவை லட்சக்கணக்கில் உள்ளது உண்மை.', என்றனர். எனவே ஊராட்சிகளில் ஒரே மாதிரியான டெபாசிட் மற்றும் குடிநீர் கட்டணத்தை நிர்ணயம் செய்ய உத்தரவிடுவதோடு, ஊராட்சிகளில் லட்சக் கணக்கில் நிலுவையில் உள்ள குடிநீர் கட்டணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.