உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / நகராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்க தொடர் போராட்டம்

நகராட்சி குப்பை கிடங்கில் பற்றிய தீயை அணைக்க தொடர் போராட்டம்

கம்பம்: கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று முன்தினம் மாலை பற்றிய தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.கம்பம் நகராட்சி குப்பை கிடங்கு ஆங்கூர் பாளையம் ரோட்டில் உள்ளது. இதில் குப்பை நிரம்பியதால்,15 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் குமுளி ரோட்டில் 4 ஏக்கரில் குப்பை கிடங்கு அமைத்தனர். அங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும்,மக்காத குப்பை என பிரித்து உரம் தயாரிக்கும் பிரமாண்ட கூடம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூடத்தில் பணிகள் சரிவர நடப்பதில்லை. குப்பைகள் அருகில் உள்ள இடங்களிலும் மலை போல் குவிக்கப்பட்டுள்ளது.பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் அடங்கிய மக்காத குப்பைகளும் மலை போல் உள்ளது. இந்த குப்பை கிடங்கை ஒட்டி ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட கசடு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.நேற்று முன்தினம் மாலை குப்பை கிடங்கில் தீ பற்றியது. தீயை அணைக்க கம்பம், உத்தமபாளையம், கடமலை, மயிலாடும்பாறை தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த 4 வண்டிகள், 50க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை முதல் போராடி வருகின்றனர். குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கரும்புகை வானத்தில் பெரிய அளவில் வட்டமிட்டு தெரிந்தது. கம்பம் நகர் மட்டுமின்றி அருகில் உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, ஆங்கூர்பாளையம், மஞ்சக்குளம், சாமாண்டிபுரம் போன்ற கிராமங்களிலும் துர்நாற்றத்துடன் கூடிய கரும்புகை காணப்படுகிறது.தீயணைப்பு துறையினர் கூறுகையில், குப்பை எவ்வளவு என்பதை கணக்கீடு செய்ய முடியவில்லை. பிளாஸ்டிக், பாலிதீன் இருப்பதால் அணைப்பதில் சிரமம் உள்ளது. எப்போது அணைக்கப்படும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. இப்போதைக்கு நான்கு வாகனங்கள் பயன்படுத்துகின்றோம். தேவைப்பட்டால் கூடுதல் வாகனங்கள் வரவழைப்போம் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !