உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / துணை சுகாதார நிலையம் பூட்டியதால் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

துணை சுகாதார நிலையம் பூட்டியதால் சிகிச்சை பெற முடியாமல் தவிப்பு

போடி: போடி அருகே விசுவாசபுரத்தில் துணை சுகாதார நிலைய கட்டடம் சேதமடைந்ததால் பயன்பாடு இன்றி பூட்டி வைத்துள்ளனர்.இதனால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமம் அடைகின்றனர்.போடி அம்மாபட்டி ஊராட்சி, விசுவாசபுரத்தில் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விசுவாசபுரம் பஸ் ஸ்டாப் அருகே செவிலியர் தங்கி பணிபுரியும் வகையில் அரசு துணை சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இப்பகுதி மக்கள் இங்கு சிகிச்சை பெற்றனர். கட்டடம் 40 ஆண்டுகளுக்கு மேலானதால் தற்போது கட்டடம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாடு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது.தற்போது தற்காலிகமாக அருகே உள்ள தனியார் பள்ளி வளாக அறையில் காலையில் மட்டும் பெயரளவிற்கு செயல்படுகிறது. டாக்டர் வராததால் செவிலியர் வந்து சிகிச்சை அளித்து செல்கிறார். குறிப்பிட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் நோயாளிகள் சிகிச்சை பெற முடியவில்லை.-மீனாட்சிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல வேண்டி உள்ளது. கர்ப்பிணிகள் பிரசவத்திற்கு போடி,தேனி மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டியுள்ளதால் சிரமம் அடைந்து வருகின்றனர்.தற்போது குப்பை கொட்டும் இடமாகவும், சமூக விரோத செயல்கள் நடக்கும் கூடாரமாக மாறி உள்ளன. துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. துணை சுகாதார நிலைய கட்டடத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ