| ADDED : நவ 16, 2025 04:16 AM
பெரியகுளம்: பெரியகுளம்- தாமரைக்குளம் வழியாக பஸ் வழித்தடங்கள் பெற்றும் புறக்கணிக்கும் பஸ்களால் கல்லூரி மாணவ, மாணவிகள் அவதிப்படுகின்றனர். தாமரைக்குளம் பகுதியில் இருந்து ஆண்டிபட்டி அரசு கல்லூரிக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர். மேலும் ஆண்டிபட்டி, வைகை அணை பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர். தாமரைக்குளம் விவசாயிகள் இடுபொருள் வாங்க இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களில் சென்று வருகின்றனர். சப்- கலெக்டர் அலுவலகத்திற்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தனியார் மகளிர் கல்லூரி, அரசு மேல்நிலை, துவக்கப்பள்ளிகள் இப்பகுதிகளில் இயங்கு கின்றன. பெரியகுளத்தில் இருந்து தாமரைக்குளம் வழியாக ஆண்டிபட்டி வரை ஏழு அரசு பஸ்கள், இரு தனியார் பஸ்கள், நான்கு மினி பஸ்களும் இந்த வழியாக சென்று வரவேண்டும். சில மாதங்களாக ஓரிரு அரசு பஸ்களைத் தவிர பெரும்பாலான பஸ்கள் இந்த வழித்தடத்தில் செல்வதில்லை. இதனால் கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், கண்மாய்க் கரை வழியாக 1.5 கி.மீ., தூரம், டூவீலரிலும், நடந்தும் வடுகபட்டி ரோடு, பங்களாபட்டி பிரிவு அருகே நின்று, ஆண்டிபட்டி செல்லும் பஸ்களில் ஏறி செல்கின்றனர். மழை காலங்களில் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். தாமரைக்குளத்தை புறக்கணிக்கும் பஸ்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.