உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி தேனி எல்லைகளில் வாகன சோதனை பன்றிகள், தீவனம், உணவுக் கழிவு வாகனங்களுக்கு தடை

கேரளாவில் பன்றிக்காய்ச்சல் எதிரொலி தேனி எல்லைகளில் வாகன சோதனை பன்றிகள், தீவனம், உணவுக் கழிவு வாகனங்களுக்கு தடை

தேனி: கேரள பண்ணைகளில் வைரஸ் பாதிப்பால் பன்றிகள் இறந்ததால் தேனி மாவட்டம் குமுளி, கம்ப மெட்டு, போடி மெட்டு சோதனை சாவடிகளில் கால்நடை துறை, போலீஸ் பாதுகாப்புடன் சோதனை நடத்தி பன்றிகள், தீவனங்கள், உணவு கழிவுகளை ஏற்றி வரும் வானங்களை திருப்பி அனுப்புகின்றனர். கேரளா கோட்டயம், திருச்சூர் மாவட்டங்களில் உள்ள பன்றிப் பண்ணைகளில் வைரஸ் பாதிப்பால் பன்றிகள் இறப்பு ஏற்பட்டது. அம்மாநில கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் எச்சரிக்கை விடுத்ததால் தமிழக எல்லைகளான குமுளி, கம்ப மெட்டு, போடி மெட்டுப் பகுதியில் தேனி கால்நடை பராமரிப்புத்துறை, போலீசாருடன் இணைந்து வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்துவதுடன், கிருமி நாசினி தெளித்த பின் செல்ல அனுமதிக்கப்படுகிறது. பன்றிகள், தீவனங்கள், பண்ணை சார்ந்த பொருட்கள், உணவு கழிவுகள் கொண்டு வரும் வாகனங்களை கேரளாவிற்கு திருப்பி அனுப்புகின்றனர். தேனி கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் கோயில்ராஜா கூறியதாவது: மாவட்ட பன்றிப் பண்ணைகளில் காய்ச்சல் பாதிப்பு குறித்து கண்காணித்து வருகிறோம். பன்றிகள் திடீர் இறப்பு, வைரஸ் பாதிப்பு, தீவனம் உட்கொள்ளாமல் சோர்வுடன் இருத்தல், காய்ச்சல், தோல் அரிப்பு, காது ஓரங்களில்சிகப்பு மற்றும் நீலநிறம் பரவுதல், இறந்த பன்றிகளில் ரத்தக்கசிவு ஏற்படுதல்உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உரிமையாளர்கள் கால்நடை துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பரவல் இல்லை. இது மனிதர்களுக்கு பரவாது. பன்றிகளுக்கு மட்டுமே இறப்பினை ஏற்படுத்தும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ