உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் பயன்இன்றி பாழாகிறது அரசு அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட கட்டடம் பயன்இன்றி பாழாகிறது அரசு அருங்காட்சியகம் அமைக்க வலியுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளத்தில் 144 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நீதிமன்ற கட்டடம் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பித்து 3 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி பாழாகி வருகிறது. இக் கட்டடத்தில்மாவட்ட அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பெரியகுளம் நகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.பெரியகுளத்தில் 1880 ல் ஆங்கிலேயரால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், முன்சிப் நீதிமன்றம், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் கட்டப்பட்டது. தாலுகா அலுவலகம் முன்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பழமை மாறாமல் சுண்ணாம்பு, கடுக்காய், கருப்பட்டி, தயிர், முட்டை கலவையால் 2021ல் புதுப்பிக்கப்பட்டது. இதனால் இந்த நீதிமன்றம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு மாற்றப்பட்டது.

கோடையிலும் குளு குளு

இக்கட்டத்தின் உறுதியும், கட்டுமானத்தின் நேர்த்தியும் மின்சாரம் இல்லாவிட்டாலும் எப்போதும் ' குளு குளு' வென்று இருக்கும். பொதுப்பணித்துறை 3600 சதுர அடி கட்டடத்தை ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் பழமை மாறாமல் புதுப்பித்தது. தற்போது புதுப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் எவ்வித பயன்பாடின்றி உள்ளது. இதனால் கட்டத்தில் விஷ பூச்சிகள் தங்கும் கூடாரமாக மாறிவருகிறது. பராமரிப்பின்றி உள்ளதால் மேல்தளத்தில் இலைகளின் கழிவு தேங்கி, கழிவு தண்ணீரால் சுவர்களில் வர்ணம் பாதிக்கிறது.

சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும்

பெரியகுளம் நகராட்சி தலைவர் சுமிதா கூறுகையில்: மாவட்டம் அரசு அருங்காட்சியகம் ஆண்டிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டடத்தில் நெருக்கடியில் செயல்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை இங்கு மாற்றினால் சோத்துப்பாறை, கும்பக்கரை அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருங்காட்சியகத்தை காண வாய்ப்பாக அமையும். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திற்கும், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ