குண்டும் குழியுமான கம்பமெட்டு ரோடு
கம்பம்: கம்பமெட்டு ரோடு குண்டும் குழியுமாக மாறியுள்ளதால் இந்த ரோட்டை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டத்தில் தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் ரோடுகளாக கம்பம் , குமுளி மற்றும் போடிமெட்டு ரோடுகள் உள்ளன. இதில் குமுளி, போடிமெட்டு ரோடுகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கின்றது. கம்பமெட்டு ரோட்டை மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிக்கின்றது. கம்பத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள கம்பமெட்டு மலை ரோடு மட்டும் 7 கி.மீ. தூரமாகும். 20 க்கும் மேற்ப்பட்ட கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. செங்குத்தான இந்த ரோட்டில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். மழைநீர் ரோட்டில் வழிந்து ஓடுவதால் அடிக்கடி ரோடு சேதமடைகிறது. தற்போது பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறி உள்ளது. வாகன போக்குவரத்திற்கு லாயக்கற்றதாக மாறி வருகிறது. தினமும் நூற்றுக்கணக்கான ஜீப்புகளில் தோட்ட தொழிலாளர்கள் கம்பம் பள்ளத்தாக்கிலிருந்து இடுக்கி ஏலத் தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். எனவே குண்டும் குழியுமான ரோட்டை பராமரிக்க நெடுஞ்சாலைத் துறை முன்வர ஏல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.