| ADDED : பிப் 07, 2024 12:33 AM
தேனி : தேனி அருகே பொம்மையக் கவுண்டன்பட்டியில் முன்விரோத தகாறில் தமிழ்செல்வன் என்பவரை அரிவாளால் வெட்டி காரில் தப்பியோடி கும்பலை 3 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.தேனி பொம்மையக் கவுண்டன்பட்டி பள்ளி ஓடைத்தெரு செல்லப்பாண்டியன் 27. இவரது இளைய சகோதரர் தமிழ்செல்வன் 25. பிப் 5ல் மாலை அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு சென்றார். இரண்டரை மணி நேரம் கழித்தும் சகோதரர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் தம்பியை தேடி செல்லப்பாண்டியன் கோழிப்பண்ணைக்கு சென்றார். அப்போது, 'என்னை விடுங்கடா' என தமிழ்செல்வன் சத்தம் கேட்டுள்ளது. அப்போது அதேப்பகுதியை சேர்ந்த சிலர் முன் விரோதத்தால் கத்தி, அரிவாளால் தமிழ்செல்வனின் தலை, கை, கால்கள், கழுத்தில் வெட்டிவிட்டு காரில் தப்பினர். ரத்தக்காயங்களுடன் மயங்கிய தமிழ்செல்வனை, செல்லப்பாண்டியனும், அவரது தம்பிகள் கபிலன், அஜய் ஆகியோர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி., சிவபிரசாத், டி.எஸ்.பி., பார்த்திபன் விசாரித்தனர். இச் சம்பவத்தில் ஈடுபட்டு காரில் தப்பிச் சென்ற பிரபாகரன், குமரேசன், பாஸ்கரன், சருத்துப்படி விஜி ஆகிய நால்வர் மற்றும் சிலர் மீது அல்லிநகரம் இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்.ஐ., செந்தில்குமார் கொலை முயற்சி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். 3 தனிப்படை போலீசார் காரில் தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.