உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / டெண்டர் பெற்ற நிறுவனம் பணி துவங்காததால் 18 பேரூராட்சிகள் இருளில் மூழ்கும் அவலம் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தல்

டெண்டர் பெற்ற நிறுவனம் பணி துவங்காததால் 18 பேரூராட்சிகள் இருளில் மூழ்கும் அவலம் கலெக்டர் தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தல்

கம்பம்: தேனி மாவட்டத்தில் 18 பேரூராட்சிகளில் எல். இ. டி. விளக்குகள் பொருத்த டெண்டர் எடுத்த நிறுவனம் அந்த பணிகளை மேற்கொள்ளாததால் பேரூராட்சிகள் இருளில் மூழ்கி வருகிறது.பேரூராட்சிகளில் தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை 2022 அக்.14 ல் பிறப்பித்த அரசாணை 146 ன் படி -2022 நவ., பேரூராட்சிகளின் ஆணையரகம் அரசாணையை செயல்படுத்த அனுமதி வழங்கியது.அந்த அனுமதியை தொடர்ந்து தேனி மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகளில் ஏற்கனவே உள்ள தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்ற டெண்டர் 2023 ஜனவரியில் உதவி இயக்குனரால் விடப்பட்டது.ரூ.4 கோடியே 7 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பீட்டில் 7236 எல்.இ.டி. விளக்குகள் புதிதாக பொருத்த , தனியார் நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. ஆனால் டெண்டர் எடுத்த நிறுவனம் இதுவரை தெருவிளக்குகள் பொருத்தும் பணியை மேற்கொள்ளவில்லை.நகராட்சி நிர்வாகம்,குடிநீர் வழங்கல் துறையின் இந்த அரசாணைப்படி, அரசாணை வெளியான பின்பு, பேரூராட்சி நிர்வாகங்கள், தனியாரிடம் தெருவிளக்கு பராமரிப்பிற்கென தனியாக மின் பொருள்கள் வாங்க தடை விதித்தது. இதனால் பேரூராட்சிகளில் பழுதடைந்த தெருவிளக்குகளை பழுது நீக்க முடியவில்லை. டெண்டர் பெற்ற நிறுவனம் பணிகளை துவக்கவில்லை. தனியார் கடைகளிலும் கொள்முதல் செய்ய கூடாது. இதனால் தேனி மாவட்டத்தில் உள்ள 18 பேரூராட்சிகள் இருளில் மூழ்கி வருகிறது. டெண்டர் எடுத்த நிறுவனம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக எல்.இ.டி., விளக்குகள் பொருத்தும் பணியை மேற்கொள்ளவில்லை. - இதனால் பேரூராட்சிகளில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் எழுந்து வருகிறது. கலெக்டர் ஷஜீவனா அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ