உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / சுடுகாடு ஆக்கிரமிப்பால் 15 கி.மீ., துாரம் சென்று தகனம் செய்யும் அவலம் ஏ.வாடிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனி மக்களின் சோகம்

சுடுகாடு ஆக்கிரமிப்பால் 15 கி.மீ., துாரம் சென்று தகனம் செய்யும் அவலம் ஏ.வாடிப்பட்டி ஊராட்சி இந்திரா காலனி மக்களின் சோகம்

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், டி.வாடிப்பட்டி ஊராட்சியில் சுடுகாடு வசதி இல்லாததால் 15 கி.மீ., தொலைவில் பெரியகுளத்தில் உள்ள எரியூட்டும் மையத்திற்கு கொண்டு சென்று சிரமம் அடைவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.பெரியகுளம் ஒன்றியம், டி.வாடிப்பட்டி ஊராட்சியில் 6வார்டுகளில்இரண்டாயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். ஒன்றியத்திலேயே சிறிய ஊராட்சியான இங்கு சாக்கடை வசதி, சுகாதார வளாகம், ரோடு வசதிகள் இன்றி மக்கள் சிரமப்படுகின்றனர்.ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குயவர் ஊரணியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இந்திரா காலனியில் குடிநீர் தொட்டி கீழ்புறம் சாக்கடை செல்ல வழி இல்லாமல் தேங்கியுள்ளது.இதுனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு கடியால் மக்கள் காய்ச்சல் பாதித்து அவதிப்படுகின்றனர்.

மரம் விழுந்து போக்குவரத்து நெரிசல்

முத்துசெழியன், ஏ.வாடிப்பட்டி: பஸ்ஸ்டாப் அருகே பல நாட்களாக குப்பை தேங்கி கிடக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு ரோட்டோரம் மரம் விழுந்ததில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலை துறை நிர்வாகம் கீழே விழுந்த மரக்கிளையை வெட்டி ரோட்டோரம் போட்டனர். மறுநாள் வந்து இதனை அகற்றுவோம் எனதெரிவித்து விட்டு சென்றனர்.தற்போது வரை வரவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பஸ்ஸ்டாப் அருகே நிற்பதற்கு சிரமமாக உள்ளது.

15 கி.மீ., துாரம் இறந்தவரை துாக்கி செல்லும் நிலை

காமாட்சியம்மாள், இந்திரா காலனி, டி.வாடிப்பட்டி: இந்திரா காலனி பகுதியில் சுடுகாடு இருந்தது. சுடுகாடு பகுதியையும், பாதையும் ஆக்கிரமித்துள்ளதால் சுடுகாட்டை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதனால் இந்தப்பகுதியில் யாராவது இறந்தால் 15 கி.மீ., தூரம் பெரியகுளம் சுடுகாடு செல்லும் நிலை உள்ளது. பெரியகுளம் சென்று திரும்புவதற்கு 30 கி.மீ., தூரம் உள்ளது. சுடுகாட்டில் எரியூட்ட ரூ.5 ஆயிரம் வேண்டும்.இதனால் துக்கம் நிகழ்ந்தால் 'அண்டா, குண்டா' அடகு வைத்து ஈமக்கிரியை செலவு செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் 'நீர்மாலை' எடுக்க வருபவர்கள் பூமாலையை பிய்த்து வீட்டின் மேல் போடுகின்றனர். மது குடித்து விட்டு சண்டை போடுகின்றனர். ஊராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் சுடுகாடு கட்டி கொடுத்து, அருகாமையில் நீர் மாலை எடுப்பதற்கு வசதி செய்து தரவேண்டும்.

காய்ச்சலால் அவதி

சந்தியா, டி.வாடிப்பட்டி: 6வது வார்டில் சாக்கடையில் சுத்தம் செய்யவில்லை. கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாததால் இப்பகுதி மக்கள் காய்ச்சலினால் அவதிப்படுகின்றனர்.மேல்நிலைத்தொட்டிகள் அடிக்கடி சுத்தம் செய்வது இல்லை. குடிநீரில் குளோரினேசன் செய்து விநியோகம் செய்ய வேண்டும். ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம் தண்ணீர் மற்றும் பராமரிப்பின்றி நாய்கள் தங்கும் கூடாரமாக உள்ளது. இதனை சீரமைக்க வேண்டும்.சிறப்பு கிராம சபை கூட்டங்களில் மக்கள் குறைகளை எடுத்து கூறியும் நடவடிக்கை இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !