உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தேனி முதல் பக்க பேனர் செய்தி... :: எப்போது * உண்டு உறைவிட பள்ளி கட்டுமானப் பணி துவங்குவது... * முதல்வர் துவக்கியும் 3 ஆண்டுகளாக முடங்கிய அவலம்

தேனி முதல் பக்க பேனர் செய்தி... :: எப்போது * உண்டு உறைவிட பள்ளி கட்டுமானப் பணி துவங்குவது... * முதல்வர் துவக்கியும் 3 ஆண்டுகளாக முடங்கிய அவலம்

சின்னமனுார் : சின்னமனூர் வெள்ளையம்மாள் புரத்தில் கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ் ரூ.32 கோடி மதிப்பீட்டில் உண்டு உறைவிட பள்ளி கட்டுவதற்கான பூமி பூஜையை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளை கடந்தும், நிதி ஒதுக்கீடுகள் செய்யாததால் பணிகள் நடைபெறாமல் முடங்கி உள்ளன.இத்துறையின் கீழ் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய 3 மாவட்டங்களில் 213 தொடக்க பள்ளிகள் 22 நடுநிலைப் பள்ளிகள், 22 உயர்நிலைப் பள்ளிகள், 38 மேல்நிலைப் பள்ளிகள் இயங்குகின்றன. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் செக்கானுாரணி, வெள்ளையம்மாள்புரத்தில் 2 உண்டு உறைவிட பள்ளிகள் அமைக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி பூமி பூஜைகள் நடந்தன. முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வெள்ளையம்மாள்புரத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கான அடிக்கல்லை நாட்டினார்.கடந்த 3 ஆண்டுகளாக 6ம் வகுப்பு அட்மிஷன் நடக்கிறது. 160 மாணவ, மாணவிகள் சேர்க்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. ஆறாம் வகுப்பில் சேர்ந்த மாணவ, மாணவிகள் 7 ம் வகுப்பு வந்து, தற்போது 8ம் வகுப்பு படிக்கின்றனர். தற்போது 135 பேர் படிக்கின்றனர். ஏற்கெனவே உள்ள மேல்நிலைப் பள்ளியில் 4 வகுப்பறைகளை உண்டு உறைவிட பள்ளி தற்காலிகமாக செயல்பட எடுத்துக் கொண்டனர். போதிய ஆசிரியர் பணியிடங்களும் நியமிக்கப்பட வில்லை.ஏற்கெனவே இயங்கி வரும் விடுதியில் தற்போது உண்டு உறைவிட பள்ளியில் படிப்பவர்கள் தங்கி உள்ளனர். 50 பேர்கள் மட்டுமே தங்கக் கூடிய அந்த விடுதியில், 170 பேர்களையும் சேர்த்து 220 மாணவ, மாணவிகள் தங்கி உள்ளனர். இதனால் விடுதியிலும் உச்சபட்ச நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வகுப்பறைகளை எடுத்து கொண்டதால், ஏற்கெனவே படிக்கும் மாணவர்கள் மரத்தடியில் படிக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. உண்டு உறைவிட பள்ளிக்கான நிதியை உடனே ஒதுக்கீடு செய்து, பணிகளை துவக்கி நெருக்கடியை தவிர்க்க கள்ளர் சீரமைப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. கள்ளர் சீரமைப்பு துறை அலுவலர்கள் கூறுகையில், 'புதிய கட்டடங்கள் கட்ட ரூ.140 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. செக்கானுாரணி, வெள்ளையம்மாள்புரம் உண்டு உறைவிட பள்ளிகளுக்கு விரைவில் கட்டடங்கள் கட்டப்பட உள்ளன.', என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி