உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வளைகுடா நாடுகளுக்கு 3750 டன் வாழை ஏற்றுமதி தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

வளைகுடா நாடுகளுக்கு 3750 டன் வாழை ஏற்றுமதி தேனி தோட்டக்கலை துணை இயக்குனர் தகவல்

தேனி மாவட்டத்தில் இருந்து ஆண்டு தோறும் 3750 டன் வாழை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தோட்டக்கலை துணை இயக்குனர் நிர்மலா தெரிவித்தார்.தேனி தோட்டக்கலை பயிர்கள் அதிகம் சாகுபடியாகும் மாவட்டமாகும். இங்கு விளையம் காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளி நாடுகளுக்கு வாழை, முருங்கை, வெண்டை என தினமும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறையின் செயல்பாடுகள் பற்றி துணை இயக்குனர் தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக பேசியதாவது:

தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் பணி பற்றி

மத்திய, மாநில அரசுகள் சார்பில் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி அதி கரிக்கவும், சாகுபடி தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்த்தல், பயிற்சி வழங்குதல், பயிர்களில் பூச்சிநோய் தாக்குதலை கண்டறிந்து அதற்கு தீர்வு காணுதல், அரசின் மானிய திட்டங்கள் விவ சாயிகளுக்கு கிடைப்பதை கண் காணித்தல் உள்ளிட்டவை துணை இயக்குனரின் முக்கிய பணிகளாகும்.

தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பரப்பு எவ்வளவு

மாவட்டத்தில் பழங்கள் 19,817 எக்டேர், காய்கறிகள் 9,950 எக்டேர், மலைப்பயிர்களான பாக்கு, முந்திரி, காபி, தேயிலை, வெற்றிலை உள்ளிட்டவை 32,910 எக்டேர், ஏலக்காய், கொத்தமல்லி, மிளகு, கருவேப்பிளை உள்ளிட்ட வாசனை நறுமண பயிர்கள் 3585 எக்டேர், பூக்கள் 560 எக்டேர், கற்றாழை, மருகு, லெமன்கிராஸ் உள்ளிட்ட மருத்துவப்பயிர்கள் 49 எக்டேர் என சுமார் 66,890 எக்டேரில் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதா

கடந்தாண்டு சாகுபடி பரப்பை அதிகரிக்க விவசாயிகளுக்கு அவகொடா, ஸ்ட்ராபெர்ரி, கமலா ஆரஞ்சு போன்ற பழவகை கன்றுகள், சாமந்தி பூ நாற்றுகள், ஏலக்காய், கொக்கோ, ஜாதிக்காய், மிளகு உள்ளிட்டவை வளர்வதற்கு தேவையான இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நிழல் வலை குடில், பயிர் தடுப்பு வலை, உள்ளிட்டவை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.98.22 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளால் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி கடந்தாண்டு மட்டும் 1590 எக்டேர் பரப்பு அதிகரித்துள்ளது.

மாடித்தோட்டம் பற்றிய விழிப்புணர்வு உள்ளதா

நிலம் இல்லாதவர்கள் சராசரி தேவையை பூர்த்தி செய்ய மாடித்தோட்டம் அமைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதற்காக மானியத்தில் மாடித்தோட்ட தொகுப்பு ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு ரூ.1.8 லட்சம் மதிப்பில் 400 தொகுப்புகள் மானியத்தில் வழங்கப்பட்டது. இந்த தொகுப்பில் வளர்ப்பு ஊடகமான தென்னைநார், காய்கறி விதைகள், மருந்து, உரம் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும். இந்தாண்டும் 400 தொகுப்புகள்வழங்கப்பட உள்ளது. தேவைப்படுவோர் ஆன்லைன் tnhorticulture.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

முருங்கை மண்டலம் பற்றி

முருங்கை சாகுபடியை அதிகரிக்க, ஊக்குவிக்க தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்தாண்டு 32 எக்டேர் முருங்கை சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.5.2 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வாழை சாகுபடி, அறுவடை பற்றி

மாவட்டத்தில் 6793 எக்டேரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜி9, செவ்வாழை, நேந்திரன், நாழிப்பூவன், நாட்டுவாழை, ரஸ்தாளி ரகங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. தோராயமாக கடந்தாண்டு 4.41 லட்சம் டன் வாழை அறுவடை செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் தேசிய ஏற்றுமதி தரக்கட்பாடு நிறுவனத்தின் அனுமதியுடன் சின்னமனுாரில் ரூ.5 கோடியில் சிப்பம் கட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இது விரைவில் பயன்பாட்டிற்கு வரும். மாவட்டத்தில் இருந்து ஓமன், துபாய், கத்தார், சவுதி அரேபியா, ஈரான் நாடுகளுக்கு வாழை ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் சுமார் 3750 டன் வாழை வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

செயல்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி

கடந்தாண்டு பிரதமர் நுண்ணீர் பாசன திட்டம், வேளாண் வளர்ச்சி திட்டம், முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம், மானாவரி மேம்பாட்டு திட்டம், பனை மேம்பாட்டு இயக்கம், மாடித்தோட்ட, மூலிகை தோட்ட உபகரணங்கள் வழங்குதல், மூங்கில் இயக்கம், பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம், காடு வளர்ப்பு திட்டங்கள் செய்யபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டங்களில் ரூ. 17.1 கோடியில் சுமார் 30ஆயிரம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

தென்னை சாகுபடியை அதிகரிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மாவட்டத்தில் தற்போது 26,810 எக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் 270 எக்டேரில் தென்னை சாகுபடி செய்ய ரூ.32.4 லட்சத்தில் புதிய தென்னங்கன்றுகள், இடு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. நோய்தாக்குதலுக்கு உள்ளான தென்னை மரங்களை அகற்றி புதிய கன்றுகள் நடவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு 6300 பழைய மரங்கள் அகற்றி புதிய கன்றுகள் ரூ. 79.95 லட்சம் மதிப்பில் நடவு செய்யப்பட்டுள்ளது.வைகை அணை ரோட்டில் 16.8 ஏக்கரில் தென்னை நாற்றுப்பண்ணை உள்ளது. இங்கு நெட்டை, நெட்டை குட்டை ரக கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. பண்ணையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், உர, நோய், பூச்சி மேலாண்மை, உற்பத்தி அதிகரித்தல் பயிற்சிகள், நாற்றங்கால் அமைக்கும் முறைகள் பற்றி விளக்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறதா

விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அழைத்து சென்று பயிற்சிகள் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு பெரியகுளம், போடி, உத்தமபாளையம் வட்டாரங்களில் இருந்து தலா 20 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர். உத்தமபாளையம் விவசாயிகள் கேரளா திருச்சூரில் உள்ள வேளாண் பல்கலைக்கு அழைத்து செலப்பட்டடனர். அங்கு பலா சாகுபடி தொழில்நுட்பங்கள், மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்தல், பூச்சி, நோய் மேலாண்மை பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.போடி, பெரியகுளம் விவசாயிகள் பெங்களூருவில் உள்ள தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு மா பயிரில் கவாத்து செய்து, தொழில் நுட்ப பயிற்சிகள் வழங்கப்பட்டது.

தோட்டக்கலைபண்ணை பற்றி

அரசு தோட்டக்கலை பண்ணை பெரியகுளம் தாலுகா எண்டபுளி கிராமத்தில் அமைந்து ள்ளது. இங்கு மானிய விலையிலும், சில அரசு திட்டங்களில் நுாறு சதவீத மானியத்திலும் பழக்கன்றுகள், மரக் கன்றுகள், தக்காளி, கத்தரி, மிளகாய்நாற்று கள் விற்பனை செய்யப் படுகிறது. இது தவிர மண்புழு உரம், பாஸ் போ பாக்டீரியா உள்ளிட் டவை விற்பனை செய்யப் படுகிறதுமாடித் தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க கூடிய மூலிகை செடிகள், பழக்கன்றுகள், அழகுச்செடிகள், பூச் செடிகள் விற்பனை செய்யப்படுகிறது.

திட்டங்களில் பயன்பெற யாரை அணுக வேண்டும்

திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் பயன்பெறவும் நேரடியாக அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம். அல்லது உழவன் செயலி, தோட்டக்கலைத்துறை இணையதளம் tnhorticulture.gov.inல் விண்ணப்பிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை