சிறு சேமிப்பு பழக்கத்தை வளர்க்க சிறுவர்களுக்கு சேமிப்பு கணக்கு: தேனி கோட்ட தபால்துறை ஏற்பாடு
தேனி: தேனி தபால் நிலையத்தில் தேசிய தபால்துறை வார விழாவையொட்டி சிறுவர்களிடம் சிறுசேமிப்பை ஊக்கப்படுத்த தபால் சேமிப்பு கணக்கு துவங்கிய சிறுவர், சிறுமிகள் பாராட்டப்பட்டனர்.மூன்று வயதிற்கு குறைவான சிறுவர், சிறுமிகள் மத்தியில் சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நேற்று கணக்கு துவங்கும் முகாம் தேனி கோட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் நடந்தது. தேனி தபால் நிலையத்தில் 10 சிறுவர், சிறுமியர் தங்களது பெயரில் பெற்றோர் முன்னிலையில் தபால் நிலைய சேமிப்பு கணக்குகளை துவக்கினர். அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறுசேமிப்பு பழக்கம் தொடர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்களுக்கு சான்றிதழ்களை கண்காணிப்பாளர் குமரன் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் உதவி கோட்ட கண்காணிப்பாளர் ராஜேஷ்குமார், வளர்ச்சி அலுவலர் செல்வகுமார், அலுவலர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோட்ட சிறுசேமிப்புத்துறை உதவி அலுவலர் பால்பாண்டி செய்திருந்தார்.