இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்திய முன்னாள் மாணவர்கள்
பெரியகுளம்: 'சிந்துார் ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்த இந்திய இராணுவ வீரர்களை 'சல்யூட்' அடித்து வணங்கி, துணை நிற்போம்.' என முன்னாள் மாணவர்கள், மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.பெரியகுளம் அருகே வடுகபட்டியில் 1983 முதல் 1995 வரை உடன் பயின்றோர் குடும்ப சங்கம விழா தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சங்கரநாராயணன் நடுநிலைப் பள்ளி, மார்க்கண்டேயா நெசவாளர் நடுநிலைப் பள்ளி, வேளாளர் நடுநிலைப் பள்ளி, வி.கே.எஸ். நடுநிலைப் பள்ளி, மேல்மங்கலம் மாயாபாண்டீஸ்வரர் நடுநிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மாணவிகள் 175 பேர் குடும்பத்துடன் பங்கேற்றனர். முன்னாள் ஆசிரியர்கள், ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர். இந்திய இராணுவத்தின் சிந்துார் ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்த இராணுவ வீரர்களுக்கு 'சல்யூட்' அடித்து வணங்கி, இந்திய ராணுவத்திற்கு துணை நிற்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். வடுகபட்டியில் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு பசுமையாக்குவோம், நம்மில் முடிந்தவர்கள் வசதியில்லாத மாணவர்களை கல்வி கற்க உதவுவோம் என இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் குமார் நன்றி தெரிவித்தார்.--