கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மூவர் காயம் தயாரித்த போது விபரீதம்
கம்பம்:தேனி மாவட்டம், கம்பத்தில் நாட்டு வெடிகுண்டு தயார் செய்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் தயாரித்த குருநாதன் 67, அருகில் விளையாடிக் கொண்டிருந்த பேரன்கள் நித்திஷ் 7, அபிநவ் 5, காயமடைந்தனர். கம்பத்தை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன்கள் அஜித் 35, ஈஸ்வரன் 37, ராயப்பன்பட்டி அருகே ஒத்தப்பட்டியில் வசித்து வருகின்றனர். கம்பம் வனப்பகுதி சின்ன ஒவுலாபுரம் மலைப்பகுதிகளில் குருநாதன் வேட்டைக்கு செல்வது வழக்கம். இதற்கென குருநாதன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பார். குருநாதன் வீட்டில் பேரன்கள் நித்திஷ், அபிநவ் தங்கி அங்குள்ள பள்ளியில் படிக்கின்றனர். நேற்று மாலை 6:30 மணிக்கு குருநாதனின் மனைவி மயில்தாய் கடைக்கு சென்றார். அப்போது குருநாதன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரித்தார். எதிர்பாராதவிதமாக குண்டு வெடித்தது. இதில் குருநாதனின் இடது கையில் இருந்த 4 விரல்கள் சேதமடைந்தன. அருகில் விளையாடிக் கொண்டிருந்த நித்திஷ், அபிநவுக்கு கால்களில் லேசான காயம் ஏற்பட்டது. வெடிகுண்டு சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து அவர்களை மீட்டு தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தை தேனி எஸ்.பி., சினேஹாப்ரியா பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்கள் வெடி குண்டின் துகள்களை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர். கம்பம் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.