நீத்தார் நினைவு தின அஞ்சலி
தேனி: தேனி தீயணைப்பு நிலையத்தில் நீத்தார் நினைவு தின அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ், வீரர்களின் அணிவகுப்பு மரியாதையுடன் நீத்தார் நினைவு ஜோதியுடன் கூடிய நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன், நிலைய அலுவலர் (போக்குவரத்து) நாகராஜ் மலர் வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின், மாவட்ட அலுவலர் பேசியதாவது: பேரிடர் மீட்பு பணிகளில் பாதுகாப்பு உபகரணங்களை அணிவதை தவிர்க்கக்கூடாது. வீரமரணம் அடைந்தவர்களில் சிலர் எண்ணுடன் நன்றாக சிரித்த முகத்துடன் பணிபுரிந்தவர்கள். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று. அதனால் முடிந்தவரை வீரர்கள், சீருடைப் பணியாளர் ஊதிய சலுகை திட்டத்தில் இணைய வேண்டும். மேலும் தங்களுக்கு என காப்பீட்டுத் திட்டங்களில் இணைந்து, எந்நிலையிலும் நமக்கு எது நடந்தாலும், அதனால் நம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை அனைவரும் உணர்ந்து பணியாற்ற வேண்டும். நீத்தார் நினைவு தினமான இன்று (நேற்று) ஏப்.14 முதல் ஏப்.20 வரை தீத்தொண்டு விழிப்புணர்வு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டின் விழிப்புணர்வு வாசகமாக, 'தீ விபத்தில்லாத இந்தியாவை உருவாக்கி ஒன்றிணைவோம்' என அரசு வழங்கியுள்ளது. அதன்படி தீ விபத்துக்களை தவிர்க்கும் வகையில் பொது மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு செயல்விளக்க பயிற்சிகளை, வழங்கி விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பது நம் அனைவரின் கடைமையாகும்., என்றார். முன்னதாக உயிர்நீத்த வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.