நிலச்சரிவு பீதியில் இருபது குடும்பங்கள்
மூணாறு : மண் சரிவு ஏற்பட்டு ஓராண்டு ஆகியும் சீரமைப்பு பணிகள் நடக்காததால் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பீதியுடன் வசிக்கிறனர். கொச்சி, தனுஷ் கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு அருகே தேவிகுளம் இறைச்சல்பாறையில் அரசு ஆரம்ப பள்ளி பகுதியில் கடந்தாண்டு ஜூலை 30ல் மண் சரிவு ஏற்பட்டது. அங்கு மலை மீது நீண்ட விரிசலும் ஏற்பட்டதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டது. விரிசல் ஏற்பட்ட பகுதியின் கீழ் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவர்களுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட்டில் பெய்த பலத்த மழையின்போது, அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு வருவாய் துறையினர் நோட்டீஸ் அளித்தனர். அது போன்று ஆபத்தான பகுதி என்ற போதும் மழைக்கு பிறகு பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. மண் சரிவு ஏற்பட்ட பகுதியை கடந்த மே 16ல் புவியியல், வனம், பொதுப்பணி, தேசிய நெடுஞ்சாலை ஆகிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டனர். அதன்பிறகு ஜூலை 5ல் மண் அகற்றும் பணி துவங்கி இரண்டு நாட்கள் நடந்த நிலையில் பணிகள் முழுமை பெறாமல் கைவிடப்பட்டது. கடந்த வாரம் பெய்த கன மழையில் மண், கற்கள் ஆகியவை ரோட்டில் சரிந்து விழுந்தன. அவை மழை அதிகரிக்கும் பட்சத்தில் குடியிருப்பு பகுதிக்குள் சரிந்து செல்ல வாய்ப்புள்ளதால் மக்கள் பீதியுடன் வசித்து வருகின்றனர்.